

ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகைத் துறையினருக்குப் பாதுகாப்பில்லாத சூழல் அரசுக்கும், காவல்துறைக்கும் பெருமை சேர்ப்பதல்ல என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (நவ. 10) வெளியிட்ட அறிக்கை:
"தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் என்பவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது, கடும் கண்டனத்திற்குரியது.
சமூக விரோதிகள் குறித்த செய்தியை வெளியிட்டமைக்காக கொலை செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. தமிழ்நாட்டில் கூலிப் படையினரைக் கொண்டு கொலைகள் நடத்தப்படுவது பெருகியுள்ளது. இதைப் பலமுறை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.
ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகைத் துறையினருக்குப் பாதுகாப்பில்லாத சூழல் அரசுக்கும், காவல்துறைக்கும் பெருமை சேர்ப்பதல்ல!
அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். இதைத் தனிப்பட்ட ஒரு பத்திரிகையாளருக்கு ஏற்பட்ட ஒன்றாகக் கருதாமல், ஒட்டுமொத்த ஊடகத் துறையினருக்கான சவாலாகக் கருதி உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட மோசஸ் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.