Published : 10 Nov 2020 11:00 AM
Last Updated : 10 Nov 2020 11:00 AM
மறைந்த அமைச்சரின் இறப்பின் மீது பொய்யான அறிக்கைகளை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று (நவ. 10) வெளியிட்ட அறிக்கை:
"காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளாண்மைத் துறை அமைச்சர் சு.துரைக்கண்ணு 31.10.2020 அன்று இரவு 11.15 மணிக்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிமுக ஆட்சியில் எந்த ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர், சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு அமைச்சரின் இறப்பு குறித்து பொய்யான அறிக்கைகள் வெளியிட்டு, மலிவான அரசியலைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறார்.
மறைந்த வேளாண்மைத்துறை அமைச்சர் சு.துரைக்கண்ணு, கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12.10.2020 அன்று அனுமதிக்கப்பட்டார். அவருடைய குடும்பத்தினரின் விருப்பத்திற்கு இணங்கவும், அவரது நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் ஆகியவற்றுக்காக ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்த காவேரி மருத்துவமனையில் அவரது விருப்பத்தின் பேரிலும் தொடர் சிகிச்சைக்காக 13.10.2020 அன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டார்.
13.10.2020 முதல் அவருக்கு உரிய உயர் சிகிச்சைகள், காவேரி மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் குழுவினால் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. நானும், தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரும், காவேரி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினருடன் இணைந்து பணியாற்றிட அமைக்கப்பட்ட, சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் ஒரு சிறப்பு மருத்துவ வல்லுநர் குழுவும், அமைச்சரின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ வல்லுநர் குழுவினரும், தனியார் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு சிகிச்சை விவரங்கள் அறிந்து உரிய ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வந்தனர். அமைச்சரின் உடல்நலத்தை முதல்வரும், அமைச்சர்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவக் குழுவினரிடம் விசாரித்தனர்.
உயிர் காக்கும் உயரிய மருந்துகளான ரெம்டெசிவிர், பைபராசிலின் டசோபாக்டம், டெக்சாமெதசோன், டால்டெபெரின், மெரோபெனெம், லின்சோலிட் போன்ற மருந்துகள் அளிக்கப்பட்டதனால், அவரது உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், அவருக்குத் தொடர்ந்து அதிக அளவில் பிராணவாயு கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 24.10.2020-ல் இருந்து அவருக்கு நுரையீரல் பாதிப்பு 90 சதவீதமாக அதிகரித்த காரணத்தினால், பல முக்கிய உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. காவேரி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படியும், ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படியும், அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் எக்மோ என்ற உயிர்காக்கும் கருவி மூலம் அவரது நுரையீரல் இயக்கப்பட்டது.
25.10.2020 அன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தினால், அவருடைய இருதயத் துடிப்பு சீர் செய்யப்பட்டு தொடர்ந்து VA ECMO மூலம் அவருடைய இருதயம் இயக்கப்பட்டது. இதனால், 26.10.2020 மற்றும் 27.10.2020 ஆகிய இரண்டு தினங்களில் அமைச்சரது கண் இமைகள் மற்றும் கை, கால்களில் அசைவும் இருந்ததை மருத்துவக் குழுவினர் கண்டறிந்தனர்.
இவ்வாறு அமைச்சருக்குப் பல்வேறு உயர்தர தொடர் சிகிச்சைகள் மருத்துவ வல்லுநர் குழுவினரால் பல்வேறு நிலைகளில் அளிக்கப்பட்டு வந்த போதிலும், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அனைத்து முயற்சிகளும் பலன் அளிக்காமல் 31.10.2020 அன்று இரவு 11.15 மணிக்கு உயிரிழந்தார்.
மேலும், காவேரி மருத்துவமனை நிர்வாகம், அமைச்சரின் சிகிச்சை காலத்தில் அதாவது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து, இறப்பு வரை அவரது உடல்நிலை குறித்த மருத்துவமனை அறிக்கையை, அவ்வப்போது வெளியிட்டு வந்தது. காவேரி மருத்துவமனையும், மறைந்த அமைச்சருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சைகள் குறித்து அதன் இறப்பு அறிக்கையில் விவரமாகக் கொடுத்துள்ளது.
மேலும், மறைந்த அமைச்சருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான விவரங்களை காவேரி மருத்துவமனையின் பதிவேடுகள் மற்றும் பிற ஆவணங்களை மாநில மேல் முறையீட்டு அலுவலர் (தமிழ்நாடு மருத்துவமனைகள் முறைப்படுத்தும் சட்டம்) மற்றும் இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் ஆய்வு செய்து அவர்களுடைய அறிக்கைகளை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளனர். மறைந்த அமைச்சரின் உடல்நிலை பற்றியோ, அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பற்றியோ, அரசோ, மருத்துவமனையோ எதையும் மறைக்கவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் தந்த பொய்யான அறிக்கையின் மீது என்னுடைய விளக்கத்தினையும், அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளையும் நான் எடுத்துக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
'தமிழக அரசுக்கு ஒவ்வொரு உயிரும் முக்கியம்' என்ற முதல்வரின் உயரிய நோக்கத்தின் அடிப்படையில்தான் நாங்கள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றோம். திமுக கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் சிகிச்சையில் இருந்தபோது, உயரிய மருந்துகள் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, உடனடியாக அவருக்குத் தமிழக அரசு தேவையான மருந்துகளை அளித்தது.
கடவுளுக்கு நிகராகப் பணி செய்கின்ற நமது மருத்துவர்களின் சேவையைக் கொச்சைப்படுத்தும் விதமாக எதிர்க்கட்சித் தலைவருடைய அறிக்கை அமைந்துள்ளது. வேளாண்மைத்துறை அமைச்சர் சிகிச்சை பெற்றுவந்த காவேரி மருத்துவமனையில்தான் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியும் சிகிச்சை பெற்றார் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அரசியல் செய்ய எத்தனையோ காரணங்கள் இருந்தபோதிலும், அமைச்சரின் இறப்பிலும் அரசியல் லாபம் தேடும் எதிர்க்கட்சித் தலைவரை தமிழ்நாடு பெற்றுள்ளது நமக்கெல்லாம் துரதிருஷ்டம். அவருடைய இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. மறைந்த அமைச்சரின் இறப்பின் மீது பொய்யான அறிக்கைகளை வெளியிட்ட எதிர்க்கட்சித்தலைவர் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்".
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT