Published : 09 Nov 2020 09:13 PM
Last Updated : 09 Nov 2020 09:13 PM

அழிக்கப்படும் காய்கனிகள்; வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் அமைக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை

வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் அமைத்து, உணவு தானியங்கள் தவிர அனைத்து வகையான காய்கனிகளையும் அரசே கொள்முதல் செய்யும்போது, உழவர்களுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைப்பதும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கனிகள் கிடைப்பதும் உறுதி செய்யப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழ்நாட்டில் புகழ்பெற்ற தக்காளி சந்தைகளில் ஒன்றான தருமபுரி பாலக்கோடு சந்தையில் சரியான விலை கிடைக்காததால் ஒரு டன்னுக்கும் கூடுதலான தக்காளிகளை சாலையில் கொட்டி அழித்துள்ளனர் விவசாயிகள். உடலை வருத்தி, உயிரைக் கொடுத்து சாகுபடி செய்த விளைபொருட்களை உழவர்களே அவர்கள் கைகளால் அழிப்பதை விட பெரும் சோகம் எதுவுமில்லை. இது மிகவும் வேதனையளிக்கிறது.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சில்லறை விற்பனைக் கடைகளில் தக்காளி ஒரு கிலோ குறைந்தபட்சம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்குதான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சந்தையில் தக்காளியை விற்பனை செய்ய வேண்டுமானால், அதற்கான கட்டணமாக 20 கிலோவுக்கு ரூ.5 செலுத்த வேண்டும். இது தவிர சுமை தூக்குவதற்கான கூலியைக் கொடுத்தால் அதற்கே தக்காளியின் கொள்முதல் விலை செலவாகிவிடும். நிலத்தில் தக்காளியைப் பறிப்பதற்கான கூலி, போக்குவரத்துச் செலவு ஆகியவற்றுக்கு விவசாயிகள் சொந்தக் காசைத்தான் செலவழிக்க வேண்டும்.

தக்காளியைப் பயிரிடுவதற்காக செய்த முதலீடுகளை முழுவதுமாக இழந்து, கூடுதலாக இந்த இழப்பையும் உழவர்கள்தான் தாங்கிக்கொள்ள வேண்டும். உலகில் உழவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய இழப்புகள் ஏற்படும். இதுதான் வேளாண் தொழிலின் சாபக்கேடு ஆகும்.

தக்காளியை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய இழப்பு ஏற்படுகிறது. அதை வாங்கி விற்கும் வணிகர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் லாபம் கிடைக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக பாமக தொடர்ந்து போராடி வருகிறது. அனைத்துக் காய்கறிகளுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிப்பதன் மூலம்தான் காய்கறிகளைப் பயிரிடும் உழவர்களுக்கு லாபம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

அண்மையில் கேரளத்தில் தக்காளி, வாழை, பாகற்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட 16 வகையான காய்கறிகளுக்குக் குறைந்தபட்ச கொள்முதல் விலையை அம்மாநில அரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் அந்த காய்கறிகளைப் பயிரிடுவோருக்கு அனைத்துச் செலவுகளும் போக 20% லாபம் கிடைக்க வகை செய்யப்பட்டிருக்கிறது. இதைவிட சிறப்பான திட்டத்தை பாமக கடந்த பல ஆண்டுகளாகப் பரிந்துரைத்து வருகிறது.

அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதற்கு வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான் பாமக வலியுறுத்தி வரும் திட்டம் ஆகும். உணவு தானியங்கள் தவிர அனைத்து வகையான காய்கனிகளையும் அரசே கொள்முதல் செய்யும் போது, உழவர்களுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைப்பதும், பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் காய்கனிகள் கிடைப்பதும் உறுதி செய்யப்படும்.

காய்கனிகளின் விலை அதிகரிக்கும்போது, அந்தக் காய்கறிகளை அரசே கொள்முதல் செய்து, மலிவு விலையில் விற்பனை செய்கிறது. இந்த நடைமுறையை ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்கும்போது, உழவர்களும் பயனடைவார்கள். இதற்காக பண்ணை பசுமைக் கடைகளை அதிக எண்ணிக்கையில் திறக்கும்போது புதிய வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும்.

இப்போது உள்ள சில்லறை காய்கனி கடைகளுக்கும் மலிவு விலையில் காய்கறிகளை அரசே கொள்முதல் செய்து வழங்க முடியும். அனைத்துத் தரப்புக்கும் பயனளிக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற அமைப்பை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறேன்.

காய்கனிகளின் உற்பத்தி அதிகரிக்கும்போது அதன் விலைகள் அதல பாதாளத்திற்குச் சரிவதும், உற்பத்தி குறையும்போது விலைகள் விண்ணைத் தொடுவதும் வாடிக்கையாகிவிட்டன. விலைகள் உயரும்போது உழவர்களுக்குப் பெரிய அளவில் பயன் கிடைப்பதில்லை. ஆனால், விலைகள் சரியும்போது உழவர்கள்தான் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

மாநிலம் முழுவதும் குளிர்பதனக் கிடங்குகளை அமைத்து விளைபொருட்கள் சலுகை விலையில் இருப்பு வைக்க அனுமதிப்பதன் மூலம் காய்கனி விலைகள் நிலையாக இருப்பதையும், உழவர்களுக்கு லாபம் கிடைப்பதையும் உறுதி செய்யலாம்.

அதுமட்டுமின்றி, எந்தெந்தப் பகுதிகளில் எந்தெந்த காய்கனிகள், கிழங்கு வகைகள், மலர்கள் அதிக அளவில் விளைகின்றனவோ, அந்தப் பகுதிகளில் அந்தக் காய்கனிகளுக்கான வேளாண் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கலாம் என்றும் பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உதாரணமாக, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தக்காளி, மாம்பழம் ஆகியவை அதிக அளவில் பயிரிடப்படுவதால் அவற்றுக்கான சிறப்பு மண்டலங்களையும், ரோஜா மலர் ஏற்றுமதி மண்டலங்களையும் அமைக்கலாம்.

அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய மண்டலங்களை அமைப்பதன் மூலம் அங்குள்ள உழவர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x