Published : 09 Nov 2020 06:04 PM
Last Updated : 09 Nov 2020 06:04 PM

ராமநாதபுரத்தில் 134 ஆண்டுகளுக்கு முன்பு குளம் உருவாக்கிய தாத்தா; அதற்கு மதில் சுவர் எழுப்பிய பேரன்: சுவாரஸ்ய தகவலடங்கிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

ராமேசுவரம்

வறட்சிக்குப் பெயர்போன ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சத்திரக்குடி அருகே வளநாடு என்ற ஊரில் கண்டுபிடிக்கப்பட்ட 134 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு மூலம், தற்போதும் மக்கள் பயன்பாட்டில் இருக்கும் ஒரு குளம் தாத்தாவால் உருவாக்கப்பட்டதையும், அதைச்சுற்றி அவரது பேரனால் திருமதில் அமைக்கப்பட்டதையும் அறிய முடிகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே வளநாடு முருகன் கோயில் வளாகத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதாக வேளானூர் பள்ளிக் கணித ஆசிரியர் பேரையூர் கு.முனியசாமி கொடுத்த தகவலின்பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டைப் படி எடுத்துப் படித்து ஆய்வு செய்தார்.

இதுகுறித்து வே.ராஜகுரு கூறியதாவது,

வளநாடு முருகன் கோயில் வளாகத்தில் 2½ அடி அகலமும், 1 அடி உயரமும் உள்ள செவ்வக வடிவிலான ஒரு பலகைக் கல்லில், 11 வரிகள் கொண்ட ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

கடவுள் கிருபையால் வளநாட்டில் சிறப்புற்று இருக்கும் கருப்பபிள்ளை என்பவர், இவ்வூர் முருகன் கோயிலுக்கு வடக்கில் உள்ள திருக்குளத்தை உருவாக்கியதாகவும், அதன்பிறகு அவரது பேரன் குருந்தபிள்ளையாகிய தங்கச்சாமியாபிள்ளை என்பவர் அக்குளத்தைச் சுற்றி திருமதில் மற்றும் படி அமைத்துக் கொடுத்ததாகவும் கி.பி.1886-ம் ஆண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விய வருடம் சித்திரை மாதம் 29 என தமிழ் ஆண்டும், 1886, மே 2 என ஆங்கில ஆண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. துரைகள் மற்றும் கடவுள் அனுக்கிரகத்தால் இது கட்டப்பட்டது என தெரிவித்துள்ளதன் மூலம் ஆங்கிலேயர் அனுமதி பெற்று மதில் சுவர் கட்டியதாகத் தெரிகிறது.

பெரிய அளவிலான இக்குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட மதில் சுவர் மூன்று அடி அகலத்தில் செங்கல், சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்டுள்ளது.

தற்போது மதில் சுவர் முழுவதும் சேதமடைந்து விழுந்து விட்டதால் அதில் இருந்த இக்கல்வெட்டு கோயில் பகுதிக்கு வந்திருக்கலாம். இங்கு கருப்பபிள்ளை பெயரில் ஒரு மடமும் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x