Published : 09 Nov 2020 05:45 PM
Last Updated : 09 Nov 2020 05:45 PM

செல்லப் பிராணிகளுக்கு உகந்த முறையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவது எப்படி?- கால்நடை மருத்துவத்துறை வழிகாட்டுதல்

பட்டாசு சத்தத்தால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் செல்லப்பிராணிகளுக்கு உகந்த முறையில் தீபாவளிப் பண்டிகையை எப்படிக் கொண்டாடலாம் என்று அரசு கால்நடை மருத்துவர் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

நகரமயமாக்கல், வாகனப்போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள் பெருக்கம் போன்றவற்றால் ஆண்டு முழுவதுமே காற்று மாசு ஏற்படுகிறது. ஆனால், ஏனோ தீபாவளி வந்துவிட்டால் மட்டும் ஒலி மாசு, காற்று மாசு பற்றி அதிகம் பேசப்படுகிறது. அதற்காக பட்டாசு வெடிப்பதால் ஒலி மாசு ஏற்படுவதையும், அதனால், வீட்டு வளர்ப்பு பிராணிகள், மற்ற விலங்கினங்கள் அச்சமடைவதையும் மறுக்க முடியாது.

அதனால், தீயணைப்பு துறை, வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறைகள் சார்பில் மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் காற்று மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்த பாதுகாப்பாக எப்படி பட்டாசு வெடிப்பது என்பது பற்றி விழிப்புணர்வு செய்து வருகின்றன. ஒலி மாசு மனிதனை மட்டுமில்லாது அவனைச் சார்ந்து வளரக்கூடிய செல்லப்பிராணிகளையும் அதிகம் பாதிக்கிறது.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த அரசு கால்நடை மருத்துவர் ச.மெரில்ராஜ் கூறியதாவது:

வீடுகளில் பொழுதுப்போக்கிற்காகவும், மன அமைதிக்காகவும் நாய், கிளி, புறா, பூஜை, முயல் உள்ளிட்ட பல்வகை செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. பட்டாசுகளை பாதுகாப்பு இல்லாமல் வெடிப்பதால் நாய்கள் குரைக்கும். மற்ற விலங்குகள் பேராபத்து எதுவும் வருகிறதோ என்ற பயம் மற்றும் நடுக்கத்தால் மறைவான இடங்களில் சென்று ஒளிந்து கொள்ள முயற்சிக்கும். உணவு சாப்பிடுவதை தற்காலிகமாக நிறுத்திவிடும். நரம்பு மண்டலம் பாதிப்பு, காது கேளாமை, வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதய துடிப்பு, மன அழுத்தம் அதிகரிக்கும். தெருநாய்கள் தங்கள் வழக்கமான இருப்பிடத்தை விட்டு வேறு இடத்திற்கு நகர்ந்து செல்லும்.

இதைத் தவிர்க்க பட்டாசு சத்தம் கேட்காத வகையில் செல்லப் பிராணிகளை தனி அறைகளில் வைத்து ஜன்னல் கதவுகளை மூட வேண்டும்.

பட்டாசு சத்தத்தை அவைகள் கேட்காமல் இருக்க ரேடியோ அல்லது தொலைகாட்சிகளில் பாடல்களை போடலாம். எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை இந்த காலக்கட்டத்தில் வழங்க வேண்டும். நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளின் அருகே இருந்து கொண்டு அதனை தடவி விட்டு, பேசுவதின் மூலம் அதன் கவனத்தை பட்டாசு சத்தத்திலிருந்து திசைதிருப்பலாம். பட்டாசுகளை வெடித்தப்பிறகு அதை அப்படியே போட்டு செல்லாமல் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். வீட்டினுள் பட்டாசுகளை நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் அருகே வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x