Published : 09 Nov 2020 04:04 PM
Last Updated : 09 Nov 2020 04:04 PM

அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு தேர்தலை சந்திக்கிறது: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

கோவில்பட்டி 

நாங்கள் கைகாட்டியவர் தான் முதல்வர் என பாஜக தலைவர் எல்.முருகன் அவரது ஆசையைக் கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்போடு நாங்கள் தேர்தலை சந்திக்க உள்ளோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதல்வர் நாளை (இன்று) கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய கன்னியாகுமரி மாவட்டத்துக்கு செல்கிறார்.

அங்கிருந்து நாளை மறுநாள் (11-ம் தேதி) தூத்துக்குடியில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வருகிறார். அவருக்கு வல்லநாட்டில் அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. காலை 9 மணிக்கு தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.40 கோடி செலவில் உருவான கேன்சர் சிகிச்சை மையத்தை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார். நடைபெற்று முடிந்த பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

பின்னர் அவர் விருதுநகர் மாவட்டத்துக்கு ஆய்வு கூட்டத்துக்கு செல்ல உள்ளார். செல்லும் வழியில் ஓட்டப்பிடாரம் தொகுதி சார்பில் குறுக்குச்சாலையில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் தலைமையிலும், எட்டயபுரத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் தலைமையிலும் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. கோவில்பட்டியில் எனது தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் நாளை (இன்று) திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன. காலஅவகாசம் குறைவாக இருப்பதால் திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

திரையரங்கு உரிமையாளர்களும், திரைப்பட தயாரிப்பாளர்களும் ஏற்கெனவே பேசுவதாக தெரிவித்துள்ளனர். இதில், சுமூகமாக முடிவு ஏற்பட்டால் மிகவும் மகிழ்ச்சி.

இல்லையென்றாலும், நாளை திரையரங்குகள் திறந்த பின்னர் நான் சென்னை சென்றவுடன் முதல்வரின் அனுமதி பெற்று, இரு தரப்பு அழைத்து பேசி சமரசம் தீர்வு காண அரசு ஏற்பாடு செய்யும்.

யார் முதல்வர் என்பதை தீர்மானிப்பது மக்கள் தான். தேர்தலில் அதிகமான சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், நாங்களே எங்களது முதல்வரை தேர்ந்தெடுத்துக்கொள்வோம்.

ஏற்கெனவே எங்களது முதல்வரை அறிவித்துவிட்டோம். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. நாங்கள் கைகாட்டியவர் தான் முதல்வர் என பாஜக தலைவர் எல்.முருகன் அவரது ஆசையை கூறியுள்ளார். அப்படி கூறினால் தான் பாஜகவுக்கு அவர்களது கட்சியினர் வேலை பார்ப்பார்கள். சுறுசுறுப்பாக இருப்பாக இருப்பார்கள்.

இது தேர்தல் நேரத்தில் அனைவரும் கூறுவது தான். இதனை நாங்கள் கணக்காக எடுத்துக்கொள்ளப்போவதில்லை. இன்றைக்கு உள்ள முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்போடு தேர்தலை சந்திக்க உள்ளோம். மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது, என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x