Published : 09 Nov 2020 12:43 PM
Last Updated : 09 Nov 2020 12:43 PM

நவ.16 பள்ளிகள் திறப்பு; கருத்துக் கேட்புக் கூட்டம் தொடங்கியது: பள்ளிகளில் திரண்ட பெற்றோர்

சென்னை

பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அதிக அளவிலான பெற்றோர்கள் திரளாகப் பள்ளிகளுக்கு வந்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 25 -ம் தேதி முதல் ஊரடங்கு அமலானது. இதில் பொதுமக்கள் கூடும் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட முடியாத சூழ்நிலை காரணமாக 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் கரோனா தொற்றின் வேகம் குறைவதால் பள்ளிகள் திறப்பு குறித்து கேள்வி எழுந்து வந்தது. இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அக்.31-ம் தேதி அன்று தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில், “தமிழகத்தில் பல்வேறு புதிய தளர்வுகளுடன் நவம்பர் 30-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் (9,10,11,12-ம் வகுப்புகள் மட்டும்), அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நவம்பர் 16-ம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

பள்ளிகளைத் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமது துறை உயர் அதிகாரிகளுடன் நவ.5 ஆம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலின் பள்ளிகள் திறப்பு குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்தார். கரோனா இரண்டாவது அலை, பருவமழை தொடங்க உள்ள நிலையில் மாணவர்களைப் பள்ளிக்கு அழைப்பது மீண்டும் கரோனா தொற்று பரவ வாய்ப்பு ஏற்படும். ஜனவரி மாதத்திற்குப் பின் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கலாம் என்று ஸ்டாலின் கூறினார்.

இந்நிலையில் ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டதில் மாணவர்கள், ஆசிரியர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. இவற்றைக் கருத்தில்கொண்ட தமிழக அரசு, பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பது என முடிவெடுத்து அறிவித்தது.

நவ 9 (இன்று) ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள 12,000 அரசு, தனியார் பள்ளிகளில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை அந்தந்தப் பள்ளிகளுக்கு அழைத்து கருத்துக் கேட்பது என முடிவெடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று காலை முதல் பள்ளிகளுக்குப் பெற்றோர்கள் திரளாக வந்தனர். பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 9,10,11,12 -ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு நேரம் பிரித்து அழைப்பு விடுக்கப்பட்டது.

பல பள்ளிகளில் பெற்றோர்களிடம் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒரு துண்டுத்தாள் கொடுக்கப்பட்டது. அதில் பள்ளிகள் திறக்கலாம் அல்லது வேண்டாம் எனக் குறிப்பிட்டு அதற்கு நேராக டிக் அடிக்கச் சொல்லியிருந்தனர். வேண்டும், வேண்டாம் என்றால் அதற்குரிய காரணத்தைச் சில வரிகளில் எழுதச் சொல்லி இருந்தனர்.

மாணவர் பெயர் தேவைப்பட்டால் பெற்றோர்கள் குறிப்பிடலாம் எனக் கேட்டிருந்தனர். மேலும், வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்கள் கருத்தை ஒரு காகிதத்தில் எழுதிப் பள்ளியில் கொடுக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.


இதையடுத்து இன்று காலை முதல் பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளிகளுக்கு வந்து தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். பள்ளிகள் திறப்பது, வேண்டாம் என்பது குறித்து பெற்றோர்களிடம் இருவேறு கருத்துகள் நிலவுவதைக் காண முடிந்தது.

கரோனா முழுமையாக முடிவடையாத நிலையில், இரண்டாம் அலை பரவுகிறது என்கிற தகவலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. பள்ளிக்குப் பிள்ளைகளை பொதுப் போக்குவரத்தில் அனுப்புகிறோம், என்ன பாதுகாப்பு உள்ளது, பள்ளிகளில் என்னதான் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டாலும் மற்ற நேரங்களில் மாணவர்கள் அதைக் கடைப்பிடிப்பார்கள் என்பது என்ன நிச்சயம், வீட்டில் வயதானவர்கள் உள்ள நிலையில் அவர்கள் பாதுகாப்பு என்ன எனப் பெற்றோர்களில் சிலர் கேள்வி எழுப்பினர்.

முகக்கவசம் அணிவதை எந்நேரமும் எப்படிக் கண்காணிப்பது, இந்த ஆண்டு பாதி முடிந்துவிட்டது, இனிமேல் என்ன படிக்கப் போகிறார்கள் என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.

அனைத்துத் தளர்வுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் வகுப்பில் மாணவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை. கரோனா தொற்றும் குறைந்து இயல்பு நிலைக்குத் தமிழகம் திரும்பிவிட்டது. இனியும் பள்ளிகளைத் திறக்காமல் இருப்பது சரியல்ல எனப் பெற்றோர்களில் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.

சென்னையில் கருத்துக் கேட்புக்கூட்டம் நடக்கும் பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா ஆகியோர் அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினர்.

பெற்றோர்களிடம் கேட்கப்படும் கருத்துகள் திரட்டப்பட்டு மாவட்ட அலுவலகங்களில் ஒப்படைக்கப்படும் என்றும், பெற்றோர்கள் அவர்களது கருத்துகளைத் தாராளமாகத் தெரிவிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x