Published : 24 Jan 2014 10:50 AM
Last Updated : 24 Jan 2014 10:50 AM
இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரஸ் மற்றும் அதற்கு துணை போன கட்சிகளுடன் விஜயகாந்த் கூட்டணி சேரமாட்டார் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கையுடன் கூறினார்.
தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்துவதற்காக பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், வியாழக்கிழமை காலை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலக மான தாயகத்துக்கு வந்தனர். அவர்களை வைகோ உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
வைகோவும் பொன்.ராதா கிருஷ்ணனும் சிறிது நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து இரு கட்சிகளின் குழுவினரும் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் நிருபர்களைச் சந்தித் தனர்.
வைகோ: இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் தொடர்ந்து துரோகம் செய்துவரும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை இந்தத் தேர்தலில் தூக்கியெறிய வேண்டும். அதற்கு நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராக வருவார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணி, புதிய பரிணாமம் பெற்று பெரும் வெற்றிபெறும். ஈழத் தமிழர் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உண்டு. கூட்டணிக் கட்சிகளின் அனைத்து நிலைப்பாடுகளையும் ஒவ்வொரு கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தேவையில்லை. தேர்தலில் நான் போட்டியிடுவேனா இல்லையா என்பதைக் கட்சி முடிவு செய்யும் என்றார்.
பொன்.ராதாகிருஷ்ணன்: பிப்ரவரி 8-ம் தேதி மோடி பங்கேற்கவுள்ள சென்னை பொதுக்கூட்டத்தில் வைகோவும் மதிமுகவினரும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம்.
எங்கள் கூட்டணி தமிழகத்தில் முதல் அணியாக உள்ளது. வரலாறு காணாத ஊழல், மீனவர்கள் பிரச்சினை, இலங்கைத் தமிழர்களுக்கான வாழ்வுரிமை மறுப்பு போன்ற பல்வேறு துரோகங்கள் செய்த காங்கிரஸ் கட்சியை இந்தத் தேர்தலில் வீழ்த்துவோம்.
தேமுதிகவின் 2-ம் கட்ட தலைவர்களிடம் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரஸ் மற்றும் அதற்கு துணை போன கட்சிகளுடன் விஜயகாந்த் சேர மாட்டார். தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி அளிப்பது குறித்து, கட்சியின் அகில இந்தியத் தலைமைதான் முடிவெடுக்கும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT