Published : 09 Nov 2020 03:12 AM
Last Updated : 09 Nov 2020 03:12 AM
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுதாமூர் ஊராட்சியில் அமைந்துள்ளது அருங்குன்றம் கிராமம். இங்கு, 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி ஒன்று உள்ளது. ஏரிக்கு அருகே அரசு அனுமதி பெற்ற தனியார் கல்குவாரி மற்றும்கல் அரவை தொழிற்சாலை இயங்கிவருகிறது. மேற்கண்ட தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை மற்றும் புழுதி வீடுகளிலும், அப்பகுதி விவசாய நிலங்களில் படிந்து வருகிறது.
மேலும், கல் அரவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கருங்கல் துகள்கள் அருகில் உள்ளஏரியில் படிகின்றன. இதனால், ஏரிமுழுவதும் சிமென்ட் கலவைபோல் காட்சியளிக்கிறது. இதனால், விவசாயிகள் ஏரி நீரை பாசனத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அருங்குன்றம் கிராமவிவசாயிகள் கூறும்போது, “கல் அரவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துகள்களால் சுற்றுப்பகுதி மக்களுக்கு சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும், விவசாய நிலங்களில் புழுதி படிவதால், பயிர்களின் வேர்களுக்கு தண்ணீர் இறங்காமல் கருகி வீணாகின்றன. ஏரியின் மேல்பகுதி சிமென்ட கலவை போல் உள்ளதால், கால்நடைகள் ஏரியில் தண்ணீர் குடிப்பதில்லை. அதனால், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, கல் அரவை தொழிற்சாலை விதிகளுக்கு உட்பட்டு இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மற்றும் ஏரி நீரை தூய்மையடைய செய்வதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT