Published : 09 Nov 2020 03:12 AM
Last Updated : 09 Nov 2020 03:12 AM

இறுதிகட்டத்தில் கண்ணன்கோட்டை -தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கப் பணிகள்: சென்னை குடிநீருக்கான புதிய நீர்த்தேக்கம்

கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகையில் உருவாக்கப்பட்டு வரும் புதிய நீர்த் தேக்கத்தை ஆட்சியர் நேற்று ஆய்வு செய்தார்.

கும்மிடிப்பூண்டி

சென்னை குடிநீருக்கான கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் அமைக்கும் பணியின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதை நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கங்கை திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர அரசு, கண்டலேறு அணையில் இருந்து, சென்னை குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை வழங்க வேண்டும். அந்நீரை சேமித்து வைக்கக் கூடிய பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கன அடி மட்டும்தான்.

ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழக அரசு முடிவு எடுத்தது. அதன்படி, கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய இருஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

1,485.16 ஏக்கர் நிலத்தில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வந்த இப்பணியை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், இதற்காக விவசாயிகளின் பட்டா நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது 7.15 கி.மீ தூரத்துக்குகரை அமைக்கும் பணி, கிருஷ்ணா கால்வாய் ஜீரோ பாயின்ட் அருகே இருந்து நீர்த்தேக்கம் வரை 8.6 கி.மீ தூரத்துக்கு கால்வாய் மற்றும் விளைநிலங்கள் பாசன வசதி பெற ஏதுவாக 5 மதகுகள், ஆந்திரா மற்றும் தமிழக பகுதிகளில் இருந்துவரும் மழைநீர், நீர்த்தேக்கத்துக்கு வருவதற்காக உள்வாங்கிகள் அமைக்கும் பணி என்பன உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் முடிவுக்கு வந்துள்ளன.

1,100 ஏக்கர் நீர்ப்பரப்புக்கொண்ட இந்நீர்த்தேக்கத்தில்ஆண்டுக்கு 2 முறை 500 மில்லியன் கனஅடி வீதம் தேக்கி வைக்கப்படும் ஒரு டி.எம்.சி நீரை, சென்னை குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்துக்கு அனுப்ப ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள உள்வாங்கி கோபுரம், நீர்த்தேக்க கரை கைப்பிடி சுவர்கள் உள்ளிட்ட பகுதிகளில் வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அப்பணிகளை நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இதையடுத்து ஆட்சியர் பொன்னையா தெரிவித்ததாவது: கண்ணன் கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கப் பணிகளின் இறுதிகட்டப் பணிகள் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் பருவமழைகாலத்துக்கு முன்பாக அனைத்துபணிகளையும் விரைந்து முடித்து,நீர்த்தேக்கத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர தொடர்புடைய பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x