Published : 08 Nov 2020 08:26 PM
Last Updated : 08 Nov 2020 08:26 PM

ஜெயலலிதா வீட்டிலேயே கொலை - கொள்ளை நடந்ததுதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மிகப்பெரிய சாதனை: ஸ்டாலின் விமர்சனம்

சிறப்புப் பொதுக்கூட்டத்தில் பேசும் ஸ்டாலின்.

சென்னை

ஜெயலலிதா வீட்டிலேயே கொலை - கொள்ளை நடந்ததுதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மிகப்பெரிய சாதனை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (நவ.08), நீலகிரி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்துக்குக் காணொலி வாயிலாகத் தலைமையேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

"மக்களுக்குத் துன்ப துயரம் ஏற்பட்டால் திமுகதான் முதலில் துடிக்கும். துணையாக நிற்கும். அந்தத் துயரம் துடைக்கப்படும் வரை பணியாற்றும்.

மக்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் அதிமுக கண்டுகொள்ளாது. அதனைக் கவனிக்காது. இதுதான் அதிமுக. இதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

கடந்த பத்தாண்டுக் காலத்தில் எதுவும் நடக்கவில்லை. அதிமுகவுக்குள் நடந்த குழப்பங்கள், அதிகார வெறியில் நடந்த பதவிச் சண்டை காட்சிகளைத்தான் தமிழ்நாடு பார்த்ததே தவிர வேறு எதையும் பார்க்கவில்லை.

2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். அவர் வந்ததுமே பெங்களூருவில் சொத்துக் குவிப்பு வழக்கும் வேகம் பிடித்தது. 2013-ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக குன்ஹா நியமிக்கப்பட்டார். அதுவரை நீதிமன்றத்துக்குப் போகாத ஜெயலலிதா அங்கு தொடர்ச்சியாகச் சென்று வாக்குமூலம் கொடுத்தார்.

2014-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டது. சிறைக்குப் போனார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். ஜாமீனில் வெளியில் வந்த ஜெயலலிதா வீட்டுக்குள் முடங்கி இருந்தார்.

2015-ம் ஆண்டு மேல்முறையீட்டு விசாரணையில் விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா மீண்டும் பதவிக்கு வந்தார். அதில் இருந்தே உடல் நலம் குன்றினார். மருத்துவ சிகிச்சையில் இருந்தார். 2016-ம் ஆண்டு செப்டம்பரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வர் ஆக்கப்பட்டார். டிசம்பரில் ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்திலேயே வருமான வரிச் சோதனை நடந்தது. துணை ராணுவப்படை தலைமைச் செயலகத்தில் நுழைந்தது. 2017-ம் ஆண்டு பன்னீர்செல்வம் பதவி விலகினார். சசிகலா முதல்வராக நினைத்தார். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பால் அவர் சிறைக்குப் போனார். பழனிசாமி முதல்வர் ஆனார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் சொன்னார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரிச் சோதனை நடந்தது. வாக்காளர்களுக்கு ரூ.89 கோடியைப் பிரித்துக் கொடுக்க முதல்வர் பழனிசாமி உள்பட 8 அமைச்சர்கள் திட்டமிட்டதற்கான ஆவணம் சிக்கியது. அதிமுக அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்டன. போயஸ் கார்டனுக்குள் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியை ஊழல் நிறைந்த ஆட்சி என்று சொன்ன ஓ.பன்னீர்செல்வம், ஒரு வாரத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார்.

2018 - 2019 - 2020 ஆகிய மூன்று ஆண்டுகளும் எடப்பாடி பழனிசாமியா - பன்னீர்செல்வமா என்ற மோதலில் இரண்டு அணிகளாகக் கட்சியும் ஆட்சியும் பிரிந்து மோதிக் கொண்டு இருக்கிறார்கள். திடீர் மோதல்கள் - திடீர் சமாதானங்கள் என்று போய்க்கொண்டு இருக்கிறது. இதுதான் கடந்த 10 ஆண்டுகளாக நாம் பார்க்கும் காட்சி. இவை அனைத்தும் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள். இவர்கள் ஆளும்கட்சியாக இல்லாவிட்டால் இதனை நாமோ மக்களோ ஒரு பொருட்டாக மதிக்கப் போவதில்லை.

ஆளும்கட்சியாக இருந்துகொண்டு இவர்கள் செய்து கொண்ட தொடர் மோதல் காரணமாக மக்கள் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இன்னும் சொன்னால் மக்களை மறந்தே போனார்கள்.

முதல் ஐந்து ஆண்டு காலம் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மக்களை மறந்தார் ஜெயலலிதா. அடுத்த ஐந்து ஆண்டு காலம் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள மக்களை மறந்தார் பழனிசாமி. அதனால்தான் பத்தாண்டுக் காலத்தில் தமிழகம் பெரும் பாதாளத்துக்குத் தள்ளப்பட்டது.

இந்தப் பாதாளத்தில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கான போர்தான் வர இருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தல்!

ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு தேயிலைத் தோட்டத்தில் உள்ள பங்களாவில் நடைபெற்ற கொலை- கொள்ளைச் சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மிகப் பெரிய சாதனை என்னவென்றால், ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளை நடந்தது, கொலையும் நடந்தது, மர்ம விபத்துகள் நடந்தது என்பதுதான்.

கோடநாடு என்றால் ஜெயலலிதா என்று நினைக்கும் அளவுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கோடநாடுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. பல நூறு ஏக்கர் நிலங்களைத் தொடர்ச்சியாக வாங்கினார். இங்கே பெரிய பங்களாவைக் கட்டி அவ்வப்போது வந்து வாழ்ந்து வந்தார். சென்னையில் அவர் இல்லாவிட்டால் இங்குதான் இருப்பார்.

முதல்வராக இருக்கும்போதே பல வாரங்கள் வந்து இங்கே தங்கி இருக்கிறார். இந்த பங்களாவைக் கட்டுவதற்கு ஜெயலலிதாவுக்குப் பல வகையில் உதவி செய்தவர் கூடலூர் சஜீவன் என்பவர்.

ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோதே இந்த பங்களாவில் ஒரு கொள்ளை முயற்சி நடந்தது. ஆனால், அப்போது அது தடுக்கப்பட்டது. இதுகுறித்து கோத்தகிரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017 ஏப்ரல் 24-ம் நாள் நள்ளிரவில் கோடநாடு தேயிலைத் தோட்டத்தின் ஒன்பதாவது எண் நுழைவுவாயிலில் 11 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைகிறது. ஓம் பகதூர் என்ற காவலாளியைக் கட்டிவைத்துவிட்டு எஸ்டேட்டுக்குள் இந்த கும்பல் நுழைகிறது. இந்த ஓம் பகதூர் மூச்சுத்திணறலால் இறந்தே போகிறார். பங்களாவில் உள்ள மிக முக்கியக் கோப்புகளைத் திருடிச் சென்றுள்ளார்கள். கோப்புகள் என்றால் அவை என்னென்ன என்று இன்று வரை வெளிச்சத்துக்கு வரவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தவர். அப்படியானால் அவரது இந்தக் கோடநாடு பங்களாவில் இருந்தவை அரசாங்கக் கோப்புகளா என்பதும் தெரியவில்லை.

இந்த 11 பேர் கொண்ட கும்பலில் பெரும்பாலானவர்கள் கேரளாவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இங்கிருந்து தப்பிச் சென்றார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடியது காவல்துறை. கேரள மாநிலத்தைச் சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டார்கள். இதில் ஒருவர் சேலத்தைச் சேர்ந்த கனகராஜ். இவர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர்.

கனகராஜ் கைது செய்யப்பட்ட பிறகுதான் இது சாதாரண திருட்டு அல்ல. இதற்குப் பின்னால் பல்வேறு சதிகள் இருப்பது தெரியவந்தது. ஆனால், கோடநாடு பங்களாவில் சில சின்ன சின்ன பொருள்கள்தான் காணாமல் போனதாகவும், அவையும் கீழே கிடந்து எடுக்கப்பட்டுவிட்டது, கைப்பற்றிவிட்டோம் என்றும் காவல்துறை மறைக்க ஆரம்பித்தது.

ஜாமீனில் வெளியில் வந்த சேலம் கனகராஜ் மர்மமான முறையில் இறந்து போனார். அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் பேட்டிகள் கொடுத்தார்கள்.

இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சயான் என்பவரது மனைவியும் மகளும் மர்மமான முறையில் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்கள். இதில் சயான் மட்டும் தப்பினார்.

இந்தச் சம்பவம் நடந்த 15-வது நாள் கோடநாடு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தினேஷ் குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஐந்து பேர் மரணம் அடைந்த மர்மமான வழக்குத்தான் இந்தக் கோடநாடு வழக்கு.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் விபத்துகளிலும் தற்கொலையும் செய்து கொண்டு இறந்து போகிறார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது. யாம் அறியேன் பராபரமே!

அதற்கு இதுவரை நீதி கிடைத்ததா என்றால் இல்லை! நீதி கிடைக்காது என்பதும் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. ஜாமீனில் வெளியில் வந்த சயான் என்பவரும் வாளையாறு மனோஜ் என்பவரும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இறந்துபோன கனகராஜுக்கும் முதல்வர் பழனிசாமிக்கும் இதில் தொடர்பு இருக்கிறது என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்கள்.

முதல்வரின் பெயரை கனகராஜ் எங்களிடம் பயன்படுத்தினார் என்று வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார்கள். தங்களுக்கு உதவியதாக சஜீவன் என்பவர் பெயரையும் சயானும் வாளையாறு மனோஜும் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த சஜீவன், இரண்டு நாட்களுக்கு முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீலகிரிக்கு வந்தபோது அரசு விழாவில் அருகில் இருந்துள்ளார்.

உதகையில் உள்ள விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு இருக்கிறார். உயரதிகாரிகளுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் அரசுக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் பங்கேற்றார். இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் சஜீவன் என்பவர் கலந்து கொண்டார். இந்த சஜீவன், அவரது தம்பி சுனில் ஆகிய இருவர் பெயரும் நீதிமன்ற வாக்குமூலத்தில் இருக்கிறது.

முதல்வர் மீது குற்றம் சாட்டியதால் சிறையில் தாங்கள் சித்ரவதை செய்யப்படுவதாக சயானும் மனோஜும் புகார் கூறியுள்ளனர்.

இந்தக் கோடநாடு கொலை - கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி வடமலை முன்பு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சஜீவனுக்கு அதிமுகவில் மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் பதவியும் நீலகிரி மாவட்ட அதிமுக தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்துக்கு எதிராக அதிமுகவினரே நீலகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கோத்தகிரியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னால் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள். கூடலூரில் மூன்று மாநிலச் சாலைகள் சந்திக்கும் இடத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள். அதன்பிறகும் சஜீவனைத் தனக்கு அருகில் எடப்பாடி பழனிசாமி வைத்துக் கொள்கிறார் என்றால் கோடநாடு விஷயத்தில் எப்படி உண்மைகள் வெளியே வரும்? இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான கிருஷ்ணபகதூர் என்பவர் தலைமறைவாகி பல மாதங்கள் ஆகியும் போலீஸார் இன்னமும் ஏன் கைது செய்யவில்லை?

இந்த ஆட்சி எத்தகைய சந்தேகத்துக்குரிய மனிதர்களின் கையில் சிக்கி இருக்கிறது என்பது இதில் இருந்து தெரியவில்லையா? ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளையடிக்கத் துணிந்தவர்களைத் தண்டிக்க வேண்டாமா?

இதனிடையே தற்போது கோவை சிறையில் சயான், மனோஜ் ஆகியோருக்கு கொலை மிரட்டல் போன்ற சர்ச்சையில் கோடநாடு கொலை - கொள்ளை வழக்கு நடைபெற்று வருகிறது.

இப்படி கொலை, கொள்ளை, விபத்துகள், தற்கொலைகள், கைதுகள், மிரட்டல்கள் கொண்ட மாபெரும் குற்றச்சம்பவம்தான் கோடநாடு சம்பவம்.

இதில் முதல்வர் பழனிசாமியின் பேரில் நேரடியாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன என்றால், அப்படி ஒருவர் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார் என்றால் அது தமிழ்நாட்டுக்கே அவமானம் இல்லையா? இந்த அவமானத்தைத் துடைக்க வேண்டாமா?

ஒரு மாநிலத்தின் முதல்வர் மீது அரசியல் ரீதியான விமர்சனங்கள் வரலாம். ஆனால், இதுபோன்ற குற்றப் புகார்கள் வருமானால் அது தமிழக வரலாற்றுக்கே ஏற்பட்ட மாபெரும் தலைக்குனிவு ஆகும். அதனால்தான் தமிழகத்தை மீட்க வேண்டும் என்கிறோம்.

கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், சுற்றுச்சூழல், சமூக நீதி, வளர்ச்சித் திட்டங்கள், புதிய நிறுவனங்கள், தொழில், ஏற்றுமதி இறக்குமதி, தமிழ் மேம்பாடு, எல்லாவற்றிலும் தமிழகம் பின்தங்கிவிட்டது. பின்தங்கிவிட்டது என்பது கூட சாதாரண வார்த்தை. அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது. இதனை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு வரவேண்டும். அதுதான் எனது ஒரே லட்சியம்.

ஒரு மாநிலம், சுயாட்சி பெற்ற மாநிலமாக அமைந்தால் மட்டுமே தனது விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றிவிட முடியும் என்று அண்ணா கனவு கண்டார்கள். இன்றைய தமிழகம் சுயாட்சி பெற்ற மாநிலமாகவும் இல்லை. சுயாட்சியை விரும்புகிறவர் கையில் அதிகாரமும் இல்லை!

ஒரு மாநிலம், கல்வியில் முன்னேறிவிட்டால் போதும். அந்த மாநிலத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று காமராஜர் கனவு கண்டார். ஆனால், இன்று கல்விக்குத்தான் முதல் தடையே விழுகிறது.

நீட் தேர்வின் மூலமாக ஏழைக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்வியை எட்டாக்கனியாக மாற்றுகிறார்கள். பொறியியல் கல்லூரிகளுக்கும், கலைக் கல்லூரிகளில் சேருவதற்கும் இதுபோன்ற தேர்வு வரப்போவதாகச் சொல்லப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கை வந்தால் 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு என்று பொதுத்தேர்வுகளை வைத்து கல்வித்தடைகளை உருவாக்கி விடுவார்கள்.

எனவே, கல்வியில் நம்முடைய தமிழ்நாட்டுப் பிள்ளைகள் எந்த நிலைமைக்கு ஆளாகப் போகிறார்களோ என்பதை நினைக்கும்போது எனக்கு வேதனை அதிகமாகிறது. பள்ளிப் பிள்ளைகள் மீது அக்கறை உள்ள அரசாக தமிழக அரசு இல்லை!

அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியல் இன, பழங்குடியினரும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவரும் சிறுபான்மையினரும் விளிம்பு நிலை மக்களும் ஏழைகளும் ஏற்றம் பெற்றால் அந்த நாடு சிறப்பாக அமையும் என்று கருணாநிதி கனவு கண்டார். அவரது எல்லாத் திட்டங்களையும் எடுத்துப் பாருங்கள். இப்படிப்பட்ட எளிய மக்களை மனதில் வைத்து தீட்டப்பட்டதாக இருக்கும்.

கடல் கடந்து சென்று தமிழனின் பெருமையை நிலைநாட்டினார்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்கள். இன்று கடல் கடந்து செல்லும் செய்திகள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. இந்த அவமானத்தைத் தடுத்து நிறுத்தும் போர்தான், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல்.

நம்மால் இது முடியும். இந்தக் கொள்ளைக் கூட்டத்தை விரட்டுவது மட்டுமல்ல, அந்த இடத்தில் அமர்ந்து நல்லாட்சியைத் தர திமுகவால் மட்டுமே முடியும்.

திமுகவின் ஆட்சி என்பது தமிழகத்தை முன்னேற்றும் ஆட்சியாக அமையும்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x