Last Updated : 08 Nov, 2020 08:02 PM

 

Published : 08 Nov 2020 08:02 PM
Last Updated : 08 Nov 2020 08:02 PM

வியாபாரிகளைத் துன்புறுத்தும் அதிகாரிகள் பட்டியல் தயாரிப்பு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் தகவல்

விக்கிரமராஜா: கோப்புப் படம்.

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் மந்தமாக இருக்கிறது. இந்த நேரத்தில் லஞ்சம், அபராதம் என்று வியாபாரிகளைத் துன்புறுத்தினால், அத்தகைய அதிகாரிகளின் பட்டியலைத் தயாரித்து அரசிடம் கொடுப்போம் என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக 'இந்து தமிழ் திசை' இணையத்துக்கு அவர் அளித்த பேட்டி:

எப்படியிருக்கிறது தீபாவளி வியாபாரம்?

முன்பெல்லாம் 3 வாரத்திற்கு முன்பே தீபாவளி விற்பனை தீவிரமடைந்துவிடும். தீபாவளிக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டு வியாபாரம் மந்தமாகத்தான் இருக்கிறது. கரோனா காரணமாக மக்களின் வருமானம் குறைந்து, வாங்கும் சக்தியும் குறைந்திருக்கிறது. வியாபாரம் நடக்குமா, நடக்காதா என்று வியாபாரிகளாகிய நாங்கள் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த 7 மாத காலத்தில் இழந்த வருவாயை இந்தத் தீபாவளி நேரத்திலாவது சரி செய்துவிட முடியாதா என்று பலர் வட்டிக்குக் கடன் வாங்கி பொருட்களை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். ஆனால், வியாபாரம் குறைவாகத்தான் இருக்கிறது. கடந்த ஆண்டு இதே தேதியுடன் ஒப்பிட்டால், இந்த ஆண்டு 60 சதவீத வியாபாரம்தான் நடந்திருக்கிறது. 80 சதவீத வியாபாரமாவது நடந்தால்தான், முதலுக்கு மோசமில்லாமல் போகும்.

சென்னை போன்ற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், பிற மாவட்டங்களில் வியாபாரம் எப்படியிருக்கிறது?

இருப்பதிலேயே சென்னைதான் மிகமிக மோசமாக இருக்கிறது. காரணம், மக்களில் பலர் கரோனா காரணமாக வேலையிழந்திருக்கிறார்கள். இன்னமும் பலருக்கு உரிய சம்பளம் கிடைக்கவில்லை. பலர் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார்கள். இதனால் சென்னையில் வீடுகள் மட்டுமின்றி கடைகளின் வாசலிலும் 'டூ லெட்' போர்டு தொங்குகிறது.

முன்பெல்லாம் மக்கள் 4 பொருட்கள் வாங்கும் எண்ணத்தோடு பலசரக்குக் கடைக்கு வந்தால், 6 பொருட்களை வாங்கிவிட்டுப் போவார்கள். சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனால், எப்போதாவது தேவைப்படும் என்றும் சில பொருட்களைச் சேர்த்து வாங்கிச் செல்வார்கள். ஆனால், இப்போது எந்தக் கடைக்குப் போனாலும் கையில் லிஸ்ட்டுடன் போகிறார்கள். தேவையில்லாமல் 10 பைசா கூட செலவழிக்கக்கூடாது என்ற மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.

சென்னை போன்ற பெருநகரங்களுடன் ஒப்பிட்டால், பிற மாவட்டங்களில் வியாபாரம் பரவாயில்லை. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் வியாபாரம் பெரிதாகப் பாதிக்கவில்லை. அந்த மக்களுக்கு விவசாயம் கை கொடுத்திருக்கிறது. உணவு, வீட்டு வாடகை போன்ற செலவுகள் இல்லாததால், அவர்கள் கடைகளில் தாராளமாகப் பொருட்கள் வாங்குகிறார்கள்.

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புச் சோதனையில் லட்ச லட்சமாகப் பணம் சிக்கியிருக்கிறது. வணிக நிறுவனங்களிலும் லஞ்சம் கேட்டு அரசு அலுவலர்கள் தொந்தரவு செய்கிறார்களா?

ஆமாம். அந்த மாதிரியான தொந்தரவு அதிகமாக இருக்கிறது. பொதுவாக தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் சிலர் இப்படி வசூலிப்பது உண்டு. இப்போது கரோனா காலம். அந்த அதிகாரிகளும் இந்த நாட்டில்தான் இருக்கிறார்கள். நாட்டில் என்ன நடக்கிறது, மக்களும், தொழில், வணிகம் செய்வோரும் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும் மனிதாபிமானமே இல்லாமல், வசூல் வேட்டை நடத்துவது சரியல்ல.

அதேபோல தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்று கூறி கடைகளுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கிறார்கள், சில கடைகளுக்கு சீல் வைக்கிறார்கள். 5,000 ரூபாய் என்பது சிறு கடைகளைப் பொறுத்தவரையில் ஒருநாள் வருமானம். அதை அபகரிப்பது கடும் கண்டனத்துக்குரியது.

எனவே, இதுபோன்ற அரசு அலுவலர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் பட்டியலை அரசிடமும், சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் செய்வோம். அதேநேரத்தில், பண்டிகையோடு தொடர்புடைய கடைகளை மட்டுமாவது இரவு 12 மணி வரையில் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

பொருள் வாங்குவோர் மட்டும் கடைக்கு வாருங்கள். மற்ற காலங்களைப் போல குடும்பத்தில் இருக்கிற அத்தனை பேரும் கடைகளுக்கு வர வேண்டாம் என்றும் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்துக்கள் இந்துக்களின் கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து சிலர் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்களே?

எங்களைப் பொறுத்தவரையில் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியா ஒரு பன்மைத்துவ நாடு. பல மத, மொழி, இனத்தைச் சேர்ந்த மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்கிற நாடு. எனவே, இதுபோன்ற சுவரொட்டியை ஒட்டுவதையும், வியாபாரிகளுக்குள்ளே பிரிவினையை ஏற்படுத்துவதையும் ஏற்றுக்கொள்ள இயலாது.

வியாபாரிகள் எப்போதுமே சாதி, மத, இன அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். எல்லோருக்கும் சேவையும், வணிகமும் செய்வதுதான் வெற்றிகரமான வணிகராக இருக்க முடியும். மக்களும் எல்லோரையும் வணிகராகத்தான் பார்க்கிறார்களே தவிர, இவர் இந்து, இவர் முஸ்லிம் என்று பார்ப்பதில்லை. இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வியாபாரிகள் ஒருபோதும் பலியாக மாட்டார்கள்.

அந்த போஸ்டரை பாஜகவின் ஹெச்.ராஜா வரவேற்றிருக்கிறாரே?

எங்கள் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. பிரதமர் மோடி வெளிநாடுகளில் கம்பீரமாக நடக்கிறபோது நமது பிரதமர் என்று பெருமைப்படுகிறவர்கள்தான் நாங்கள். அதேநேரம், அவர் தவறி விழுந்தால், 'அய்யய்யோ' என்று பதறுபவர்களும் நாங்கள்தான். அந்த போஸ்டரை வரவேற்பதற்குப் பதில், 'வெளிநாட்டுப் பொருட்களை யாரும் வாங்கக் கூடாது. அவற்றை இந்தியாவில் விற்கத் தடை விதிக்க வேண்டும்' என்று ஹெச்.ராஜா சொல்லியிருந்தால் உண்மையிலேயே நன்றாக இருந்திருக்கும்.

கரோனா தொற்றுக் காலத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு தாராளமாக நிதி அளித்தது யார்? எல்லாமே உள்நாட்டு நிறுவனங்கள்தான். வெளிநாட்டு நிறுவனங்கள் நம்முடைய பணத்தை அபகரித்துக்கொண்டு, ஆபத்துக் காலத்தில் கைவிட்டுவிடுகின்றன. நான் வணிகர்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், நாம் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சகோதர தத்துவத்திற்கு முன்னுதாரண நாடாக இந்தியா இருக்கிறது. இதற்கு குந்தகம் விளைவிக்கிற வேலையில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு விக்கிரமராஜா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x