Published : 08 Nov 2020 04:54 PM
Last Updated : 08 Nov 2020 04:54 PM
நீர் மேலாண்மையில் சாதனை படைத்து தேசிய நீர் விருதுக்கு இந்திய அளவில் முதல் பரிசுக்கு புதுச்சேரி காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளி தேர்வாகியுள்ளது. இப்பள்ளி ஆசிரியர் நடப்பாண்டில் தேசிய விருது பெற்றார். கடந்த கல்வியாண்டில் 150க்கும் மேற்பட்ட பரிசுகளை இப்பள்ளிக் குழந்தைகள் குவித்துள்ளனர்.
புதுச்சேரி கிராமப் பகுதியிலுள்ள காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளி தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ராஜ்குமார் நடப்பாண்டு தேசிய விருது பெற்றார். கிராமப் பகுதியிலுள்ள இப்பள்ளிக் குழந்தைகள் மூன்று ஆண்டுகளாக தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாட்டில் புதுச்சேரி சார்பில் பங்கேற்கின்றனர்.
மத்திய அரசின் 'டிபார்ட்மென்ட் ஆஃப் பயோடெக்னாலஜி' மூலம் மடிப்பு நுண்ணோக்கி (Foldscope) என்ற ஆய்வுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தினர். ஆதலால், இப்பள்ளி மாணவர்கள் அசாமில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு விமானம் மூலம் சென்று அங்குள்ள உயிரியல் பூங்கா மற்றும் மலைப் பகுதிகளில் தங்கள் ஆராய்ச்சியைச் செய்தனர்.
அறிவியலில் சிறந்து விளங்கிய மாணவி மனிஷா, இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் அறிவியல் பரிமாற்ற நிகழ்ச்சியின் கீழ் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்பள்ளியின் மாணவர்கள் இந்தியாவின் 9 மாநிலங்களில் தங்கள் அறிவியல் ஆய்வினைக் கட்டுரைகளாகச் சமர்ப்பித்துள்ளனர். கடந்த கல்வியாண்டில் மட்டும் 150க்கும் மேற்பட்ட பரிசுகளை இப்பள்ளிக் குழந்தைகள் வென்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு இந்த விருதை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வழங்கி வருகிறது. பல்வேறு பிரிவுகளில் இவ்விருதுகள் தரப்படுகின்றன.
அந்த வகையில் 2019ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் விருதுக்கான இந்தியாவின் சிறந்த பள்ளியாக, புதுச்சேரி காட்டேரிக்குப்பம் இந்திராகாந்தி அரசு உயர்நிலைப் பள்ளி முதல் பரிசுக்குத் தேர்வாகியுள்ளது.
இப்பணிகளுக்கு வழிகாட்டியாக இருந்த இப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ராஜ்குமார் தேசிய விருதுக்குத் தேர்வானது தொடர்பாகக் கூறியதாவது:
"தண்ணீர் திட்டப்பணிகளை எங்கள் பள்ளிக் குழந்தைகள் ஆராய்ச்சி அடிப்படையில் செய்தனர். எங்கள் பள்ளி அருகேயுள்ள குளக்கரை, நீரோடும் பாசன வாய்க்கால் ஆகியவற்றில் உயிரி சூழலை ஆய்வு செய்தனர். எங்கள் பள்ளி உள்ள காட்டேரிக்குப்பம் கிராமத்தின் மண் வளத்தை ஆராய்ந்தோம். அத்துடன் நீர்வழி நோய்கள் எனப் பல விஷயங்களை ஆராய்ந்து திட்ட அறிக்கையைத் தயாரித்தோம்.
பள்ளியில் தண்ணீர் பயன்பாட்டை அடுத்தகட்டமாக ஆராயத் தொடங்கினோம். மொத்தம் 5,000 லிட்டர் செலவானது தெரிந்தது. அதில், 40 சதவீதம் கைகழுவவும், பாத்திரம் கழுவவும் செலவானது. அதில் முதல் கட்டமாக கைகழுவும் குழாய்களில் பைப்பினை அழுத்தினால் தண்ணீர் வரும் வகையில் மாற்றினோம். மொத்தம் பத்து குழாய்களை மாற்றிவிட்டோம். அதன் மூலம் 20 சதவீதம் தண்ணீர் சேகரிக்க முடிந்தது.
அதேபோல், மதிய உணவு சாப்பிட்டதும் தட்டை 20 லிட்டரில் கழுவ மாதிரித் திட்டத்தை உருவாக்கினோம். தட்டில் மீதமானவை இருந்தால் ஒரு பாத்திரத்தில் கொட்ட ஏற்பாடு செய்தோம். அதையடுத்து, இரு அண்டாக்களை வாங்கி அதில் மணல் கொட்டினோம். மணல் உள்ள முதல் அண்டாவில் தட்டை நுழைத்து எடுக்கும்போது அதில் ஒட்டியுள்ள பருக்கைகள் அதில் இறங்கி விடும். மீண்டும் அத்தட்டை அடுத்த அண்டாவில் நிரப்பிய மண்ணினுள் நுழைத்து எடுப்போம். இது மண் மூலம் கழுவுதல் (soil washnary) முறையாகும். அதையடுத்து, தட்டில் சிறு மண், தூசு ஒட்டியிருக்கும். பிறகு 20 லிட்டர் தண்ணீர் கொண்டு 200 குழந்தைகளின் தட்டையையும் சுத்தமாக தூய்மைப்படுத்தியதை மாதிரித் திட்டமாக்கினோம்.
அத்துடன் பள்ளியில் தண்ணீர் சார்ந்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, நாடகம் ஆகியவற்றை நடத்தினோம். அதைத் தொடர்ந்து டெல்லிக் குழு புதுச்சேரி வந்து எங்கள் பள்ளியில் ஆய்வு செய்தனர். எங்கள் பணிகளைப் பதிவு செய்து கொண்டனர். தற்போது தேசிய நீர் விருதுக்கான இந்தியாவின் சிறந்த பள்ளியாக முதல் பரிசுக்கு எங்கள் பள்ளி தேர்வாகியுள்ளது. டெல்லியிலிருந்து அழைத்து இத்தகவலைத் தெரிவித்தனர். எங்கள் பள்ளி தொடர்ந்து தேசிய விருதுக்கும், பல விருதுகளை வெல்வதற்கும் எங்கள் பள்ளிக் குழந்தைகளே காரணம்".
இவ்வாறு ஆசிரியர் ராஜ்குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT