Published : 08 Nov 2020 02:06 PM
Last Updated : 08 Nov 2020 02:06 PM

வாரணாசி விமான நிலையத்தைப் போல் மதுரை விமான நிலைய விரிவாக்க ஓடுதளப் பாதையின் கீழ் பொதுப் போக்குவரத்து சாலை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

ஆய்வு நடத்தும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

மதுரை

வாரணாசி விமான நிலையத்தைப் போல் மதுரை விமான நிலைய விரிவாக்க ஓடுதளப் பாதையின் கீழ் பொதுப் போக்குவரத்து சாலையும், விமானத்திற்கு ஓடுதள மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் விமான நிலையத்தின் உள்ளே இன்று (நவ. 08) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன், அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2010ஆம் ஆண்டு மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்கப்பட்டு 2012ஆம் ஆண்டு ஓடுதள விரிவாக்கப் பணிகளுக்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கின. இதற்காக 615 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு இதில் 555 ஏக்கர் நிலம் பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்த வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மதுரை விமான நிலைய ஓடுபாதைப் பகுதியை ஆய்வு செய்தபின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறும்போது, "நீர் மேலாண்மையில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதனை ஜலசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம், குடிமராமத்துத் திட்டம் போன்ற திட்டங்களைத் தமிழ்நாட்டில் முதல்வர் செய்து வருகிறார்.

83 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையில் முதல்வரே நேரடியாகத் தண்ணீர் திறந்து வைத்துள்ளார்.

ஆயிரம் கோடியில் தடுப்பணைகள் அமைக்கும் பணியானது தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.

நீர் மேலாண்மை பற்றி வரலாற்றில் படித்திருக்கிறோம். புதிய வரலாற்றைப் படைக்கும் வண்ணம் நீர் மேலாண்மையில் முதல்வர் செயல்பட்டு வருகிறார். நீர் மேலாண்மையில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக மழைநீர் சேகரிப்புத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

தற்போதுள்ள குடிமராமத்துப் பணியால் வடகிழக்கு, தென்கிழக்குப் பருவமழையின் நீரைச் சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும்.

மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிக்காக 90 சதவீத நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. 1.5 கிலோ மீட்டர் முதல் 2 கி.மீ. ஓடுதள விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளன. ஓடுதள விரிவாக்கப் பணிகளுக்கு இடையே திருமங்கலம் சுற்றுச் சாலை அமைந்துள்ளது.

நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இப்பகுதியில் வாரணாசி விமான நிலையத்தைப் போல் மதுரை விமான நிலைய விரிவாக்க ஓடுதளப் பாதையின் கீழ் பொதுப் போக்குவரத்து சாலையும், விமானத்திற்கு ஓடுதள மேம்பாலமும் அமைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கூடிய விரைவில் மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணி தொடங்க உள்ளது. இந்தப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுவார்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x