Published : 07 Nov 2020 09:13 PM
Last Updated : 07 Nov 2020 09:13 PM
கோயில்கள் எப்போதும் இருக்கத்தான் போகின்றன. கரோனா தொற்று ஒருபுறம், பருவமழை மற்றொரு புறம். இந்த நேரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு பாஜக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தாக்கல் செய்த மனுவில், “பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட பின், நவம்பர் 16-ம் தேதிக்குப் பின் மத நிகழ்ச்சிகளுக்காக நூறு பேர் வரை கூடலாம் என அரசாணையாகத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
ஆனால், அக்டோபர் 15ஆம் தேதிக்குப் பின் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வழிகாட்டு விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்தி, மத்திய அரசு அனுமதித்துள்ளது. கடந்த அக்டோபர் 30ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையைச் செல்லாது என அறிவித்து, ரத்து செய்ய வேண்டும். நவம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்க உள்ள வேல் யாத்திரையில் தலையிடக் கூடாது எனத் தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும்.
அமைச்சர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மீறி, தமிழக அரசு இந்த அரசாணையைப் பிறப்பித்துள்ளது. வேல் யாத்திரை சுமுகமாகச் செல்ல ஏதுவாக அனைத்து மாவட்டக் காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, “கோயில்களைத் தரிசனத்துக்காகத் திறந்த பிறகு பக்தர்களை அனுமதிக்க மாட்டோம் என்று தடுக்க முடியாது. கோயிலுக்குள் நுழைவதை முறைப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது.
அரசியல் ரீதியான கூட்டங்கள் கூட்டப் போவதில்லை. 30 நபர்கள் மட்டும் 15 வாகனங்களில் செல்வார்கள். இவற்றைக் கூட முறைப்படுத்தத் தமிழக அரசிடம் போதிய வசதி இல்லையா? யாத்திரைக்கும், தமிழக பாஜக தலைவருக்கும் பாதுகாப்பு கோருகிறோம்” எனத் தெரிவித்தார்.
மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன் ஆஜராகி, “பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி, மத்திய அரசின் அறிவிப்புகளை மாநில அரசுகள் நீர்த்துப்போகச் செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
தமிழக அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜரானார். அவரது வாதத்தில், “நவம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு 100 பேருடன் மட்டுமே மத நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என அவர்கள் விண்ணப்பத்தில் விவரம் இல்லை. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து, பாஜக வழக்குத் தொடரவில்லை. நேற்றைய தொடக்க நிகழ்வில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை என்பதையும் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
குறிப்பாக கரோனா இரண்டாவது அலை பரவ வாய்ப்புள்ள நேரம், தீபாவளிப் பண்டிகை ஆகியவற்றை பாஜகவினர் கருத்தில் கொள்ள வேண்டும். மாநிலத் தலைவருக்குப் பாதுகாப்புக் கோரவில்லை. யாத்திரைக்கு மட்டுமே அனுமதி கோரியுள்ளனர்” என விளக்கம் அளித்தார்.
பின்னர் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அமர்வு, “எத்தனை வாகனங்களில் எவ்வளவு பேர் செல்கிறீர்கள்? முருகன் கோயில் இல்லாத பகுதிகளுக்கு ஏன் யாத்திரை செல்கிறீர்கள்? மூத்த குடிமக்கள் எத்தனை பேர் யாத்திரையில் உள்ளனர்? போன்ற எந்த விவரங்களும் இல்லாமல் வழக்குத் தொடர்ந்துள்ளீர்கள். விரிவான விண்ணப்பத்தை அளித்திருந்தால் அரசு பரிசீலித்திருக்கலாம்.
அரசியல் யாத்திரை அல்ல, கோயிலுக்குச் செல்வதுதான் நோக்கம் என்றால் அவை அமைந்துள்ள இடங்களுக்கு மட்டும் செல்ல வேண்டியதுதானே. நேற்று நடந்த நிகழ்வின் புகைப்படம், வீடியோக்களைச் செய்திகளின் வழியாக நாங்கள் பார்த்தோம். ஒருவேளை அரசு பதிவு செய்துள்ள வீடியோக்களைத் தாக்கல் செய்தால் கட்சித் தலைமை என்ன செய்தது எனத் தெரியவரும். குறைந்த அளவிற்காவது பொறுப்புணர்வு வேண்டும்.
குறைவான தூரமுள்ள வழித்தடங்கள் உள்ள நிலையில், கோயிலுக்குச் செல்வது - நகருக்குள் வருவது - மீண்டும் கோயிலுக்குச் செல்வது என ஏன் ஊர்வலப் பாதையை அமைத்தீர்கள்? பொது அமைதி சம்பந்தப்பட்டுள்ளதால் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ஆம் தேதி யாத்திரையை நிறைவு செய்வதாகத் திட்டத்தில் உள்ள தேதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
யாத்திரை திட்டப்படி கோயில்களில் மட்டும் கூடுவதாகக் குறிப்பிடவில்லை. மாநிலம் முழுவதும் நீண்ட பேரணி போல திட்டமிடப்பட்டுள்ளீர்கள். தங்கள் கட்சியினரை பாஜக தலைவர்கள்தான் முறைப்படுத்த வேண்டும். காவல்துறையிடம் புதிதாக மனு கொடுத்தால், அவர்கள்தான் அதில் இறுதி முடிவெடுப்பார்கள்.
மேலும், கோயில்கள் எப்போதும் இருக்கத்தான் போகின்றன. கரோனா தொற்று ஒரு புறம், பருவமழை மற்றொரு புறம். இந்த நேரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என அறிவுறுத்தியது.
அப்போது வாதிட்ட பாஜக தரப்பு வழக்கறிஞர், “டாஸ்மாக், கோயில்கள் ஆகியவை திறந்துள்ள நிலையில் கூட்டம் போகிறது. நாங்கள் 30 பேர் செல்வது மட்டும் எப்படி ரிஸ்க் ஆகும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு நீதிபதிகள், ''நம் நாட்டில் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றம் பயன்படுத்தப்படுகிறது'' எனத் தெரிவித்தனர்.
அப்போது பாஜக தரப்பு வழக்கறிஞர், “புதிய மனு கொடுப்பது குறித்து முடிவெடுக்க திங்கள் வரை அவகாசம் வேண்டும். எத்தனை பேர் யாத்திரையில் கலந்து கொள்வார்கள், எத்தனை பேர் 65 வயதைக் கடந்தவர்கள் என அனைத்து முழுமையான விரிவான விண்ணப்பம் அளிக்கிறோம். அரசு நிபந்தனைகள் விதித்தால் அதை மீறமாட்டோம் என்ற உத்தரவாதத்தை அளிக்கத் தயாராக இருக்கிறோம். யாத்திரையை டிசம்பர் 5ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்கிறோம்.
ராமர் கோயில் வரவுள்ளதால் டிசம்பர் 6 கெட்ட நாள் என்பதை மக்கள் மறந்துவிடுவார்கள். ராமர் கோயில் பூமி பூஜையில், வழக்குத் தொடுத்த இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடவும், முகக்கவசம் அணியாமல் செல்லவும் அனுமதிக்கும் அரசு, வேல் யாத்திரையை மட்டும் எதிர்ப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினர்.
பின்னர் முழு விவரங்களுடன் புதிய மனுவை டிஜிபியிடம் கொடுக்க வேண்டும். அதுகுறித்த விவரத்தை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 10ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT