Published : 07 Nov 2020 05:42 PM
Last Updated : 07 Nov 2020 05:42 PM
கரோனாவுடன் அரிய வகை 'மிஸ்-சி' நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் உயிரை, விலையுயர்ந்த ஊசி செலுத்தி, கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமியைக் காய்ச்சல் காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு காய்ச்சல் குறையாத காரணத்தால் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக கரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அங்கு சிகிச்சை பெற அதிக செலவாகும் என்பதால் சிறுமியை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அக்டோபர் 25-ம் தேதி அனுமதித்தனர். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அதிகப்படியான காய்ச்சல், கழுத்தில் நெறி கட்டுதல், வாய்ப்புண், கை, கால் வீக்கம் போன்ற பல பிரச்சினைகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
பின்னர், யுஎஸ்ஜி ஸ்கேன், எக்ஸ்-ரே பரிசோதனைகளும் செய்யப்பட்டன. பரிசோதனையின் முடிவில் சிறுமிக்கு Multisystem Inflammatory Syndrome in Children (MIS-C) 'மிஸ்-சி' இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு சிகிச்சை அளித்ததன் பலனாக சிறுமி கடந்த 4-ம் தேதி நலமுடன் வீடு திரும்பினார்.
இது தொடர்பாக மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:
"மிஸ்-சி நோயைக் குணப்படுத்த வேண்டுமெனில் சிறுமிக்கு இம்யூனோகுளோபிலின் (immunoglobulin) என்ற ஊசி போட வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள ஊசி மருந்து கிடைக்க ஏற்பாடு செய்தோம். அக்டோபர் 27-ம் தேதி நரம்பு வழியாக மருந்து செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சிறுமியின் உறுப்புகள் படிப்படியாக மீண்டு வந்தன. இந்த அரிய நோயை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்ததில் குழந்தைகள் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் சுகந்தி, இணைப் பேராசிரியர் உமாசங்கர், உதவிப் பேராசிரியர்கள் கிருத்திகா, புவனேஷ் ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
'மிஸ்-சி' எந்தெந்தக் குழந்தைகளைப் பாதிக்கும் என்பது குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. பொதுவாக எதிர்ப்புச் சக்தி இல்லாத குழந்தைகளுக்கு 'மிஸ்-சி' பாதிப்பு ஏற்படலாம்".
இவ்வாறு டீன் நிர்மலா கூறினார்.
சிறுமியின் பெற்றோர் கூறுகையில், "எங்கள் மகளுக்குத் தொடர்ந்து 5 நாட்கள் காய்ச்சல் இருந்தது. தனியார் மருத்துவனையில் அனுமதித்தபோது ரத்த அழுத்தமும் குறைவாக இருந்தது. கண்கள் சிவந்திருந்தன. மேல் சிகிச்சைக்காக இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, மருத்துவர்கள் உடனிருந்து கவனித்துக் கொண்டனர். இதற்காக மருத்துவர்கள், செவிலியர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT