Published : 07 Nov 2020 03:18 PM
Last Updated : 07 Nov 2020 03:18 PM
நெய்வேலி காவல் நிலைய மரணத்திற்குக் காரணமான காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியப் பகுதியில் உள்ள துர்கை அம்மன் கோயில் அருகே கடந்த அக்.30 அன்று இளம்பெண் ஒருவர் சாலையில் செல்லும்போது செயின் பறிப்பு நடைபெற்றது. இதுகுறித்து, விசாரணை நடத்திய காவல்துறையினர், நெய்வேலி அருகேயுள்ள வடக்குத்து சக்தி நகரைச் சார்ந்த செல்வம் என்கிற செல்வமுருகன் (39) என்பவரைக் கைது செய்தனர்.
அவரைக் கைது செய்த நெய்வேலி காவல்துறையினர், அவரிடமிருந்து ஒரு பவுன் தங்கச் சங்கிலி, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். செல்வமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (நவ. 5) நள்ளிரவு உடல்நலக் குறைவின் காரணமாக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், காவல்துறையினர் தாக்கியதாலேயே செல்வமுருகன் உயிரிழந்ததாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (நவ.7) தன் ட்விட்டர் பக்கத்தில், "காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர் நெய்வேலி காவல் நிலையத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக வந்துள்ள செய்திகள் வேதனையளிக்கின்றன. காவல் நிலைய மரணங்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டும்!
நெய்வேலி காவல் நிலைய மரணங்களுக்குக் காரணமான காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லப்பட்ட செல்வமுருகன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.
காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர் நெய்வேலி காவல்நிலையத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக வந்துள்ள செய்திகள் வேதனையளிக்கின்றன. காவல்நிலையச் சாவுகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டும்!#StopPoliceBrutality
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT