Published : 07 Nov 2020 02:27 PM
Last Updated : 07 Nov 2020 02:27 PM
சரியான பராமரிப்பு இல்லாத மதுரை சாலைகளில் தற்போது பெய்யும் மழையில் எது பள்ளம், மேடு என்று தெரியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பள்ளத்தில் விழுந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. தினமும் காலை, மாலை நேரங்களில் சில மணி நேரங்கள் வரை நீடிக்கும் அளவிற்கு அடை மழையாகப் பெய்கிறது.
ஏற்கெனவே மதுரையில் சாலைகள் சரியான பராமரிப்பு இல்லாமல் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. வாகன நெரிசலும் பொதுமக்களுக்கு பெரிய சவாலாகவே இருக்கிறது.
இந்நிலையில் தற்போது 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழி தோண்டப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில்தான் மதுரையின் ஒட்டுமொத்த வணிக நிறுவனங்களும் உள்ளன. தீபாவளி சீசன் என்பதால் இப்பகுதிகளில் ஜவுளி மற்றும் இன்னும்பிற பொருட்கள் வாங்குவதற்காக திருவிழா போல் குவிந்து கொண்டிருக்கினறனர்.
தற்போது மழை தொடர்ந்து பெய்வதால் அந்த மழைநீர் சாலைகளில் உள்ள இந்த பள்ளங்கள், குழிகளில் போய் தேங்கிவிடுகிறது. மழை நீர் பெருக்கெடுத்து ஓடும்போது வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் சாலையில் எந்தப் பகுதி பள்ளம், எது மேடு என்று தெரியாமல் பயணிக்க வேண்டிய அவலம் உள்ளது.
சில நேரங்களில், வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனங்களுடன் விழுந்து கால், கை உடைந்து பாதிக்கப்படும் அவலம் நடக்கிறது. மீனாட்சியம்மன் கோயில் சுற்றுச்சாலைப்பகுதியில் சமீபத்தில் ஒரு பெண் மழைநீர் நிரம்பிய 6 அடி குழியில் விழும் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
அதன்பிறகும் கூட மாநகராட்சி நிர்வாகம், விழித்துக் கொள்ளாமல் சாலைகள் குழி தோண்டி போட்டுக் கொண்டே இருக்கிறது. குறைந்தப்பட்சம் மேம்பாட்டுப்பாட்டு பணிகள் நடக்கும் சாலைகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை பலகை கூட வைக்கவில்லை.
இது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, "ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காகவே குழிகள் தோண்டப்பட்டுள்ளன. கரோனா ஊரடங்கால் பணிகள் தாமதமாகிவிட்டது. இல்லையேல் தீபாவளிப் பண்டிக்கைக்கு முன்னதாகவே கோயில் சுற்றுவட்டாரப் பணிகள் நிறைவேறியிருக்கும். நகரின் பல பகுதிகளிலும் சாலை மேம்பாடு, விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. நகரை மேம்படுத்த பணிகள் நடக்கும் போது மக்களின் ஒத்துழைப்பும் தேவை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT