Published : 13 Oct 2015 10:25 AM
Last Updated : 13 Oct 2015 10:25 AM
திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த கீதாகுணா (35), பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர். கைவினைப் பொருட்கள் மீது கொண்ட ஆர்வத்தால், பேராசிரியர் பணியை உதறிவிட்டு, கடந்த ஆண்டு தஞ்சாவூர் பொம்மை தயாரிப்பு குறித்த தேடலில் இறங்கினார்.
ஆனால், தஞ்சாவூர் பொம்மை தயாரிப்பு குறித்து யாரும் கீதா குணாவுக்கு முறையாகவும், முழு மையாகவும் கற்றுத்தரவில்லை. 8 மாத தொடர் போராட்டத்துக்குப் பின் ஒரு வழியாக பொம்மை தயாரிப்பு தொழிலைக் கற்றுத் தேர்ந்த இவர், முதலில் வீட்டில் சில பொம்மைகளை செய்து தெரிந்த வர்களுக்கு விற்பனை செய்தார்.
அதன்பின்னர் ஒரு வீட்டில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் சிலரை துணைக்கு வைத்துக்கொண்டு தஞ்சாவூர் ராஜா-ராணி பொம்மை, தலை யாட்டும் வயதான தாத்தா-பாட்டி பொம்மை மற்றும் தலை, உடல், இடுப்பு, கால் என தனிப் பகுதிகளாக கொண்டு நடனமாடும் மங்கை (டான்சிங் டால்) பொம்மைகளை தயாரிக்கத் தொடங்கினார்.
இத்தொழிலைத் தொடங்கிய இந்த ஓராண்டில் 12 பெண்கள் வேலை செய்யும் அளவுக்கு பொம்மை உற்பத்தியை விரிவுபடுத் திவிட்டார். ஒரு வாரத்தில் 150-க்கும் அதிகமான பொம்மைகளைத் தயாரிக்கின்றனர். ரூ.200 முதல் ரூ.2,500 வரை விற்கப்படுகின்றன.
சந்தையை பிடிக்க தடுமாறிய நிலைமாறி, தற்போது பூம்புகார் நிறுவனம் மற்றும் தமிழகத்தின் பல் வேறு பகுதிகள், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.
சென்னை சர்வதேச முதலீட் டாளர் மாநாட்டில் இவர் வைத் திருந்த ஸ்டாலில் 80-க்கும் அதிக மான ‘டான்சிங் டால்’களை அயல்நாட்டினர் வாங்கியுள்ளனர்.
இதுகுறித்து கீதாகுணா ‘தி இந்து’ விடம் கூறியதாவது: தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தயாரிப்பு உட்பட பாரம்பரிய தொழில்களை சம்பந்தப்பட்டவர்கள் பிறருக்கு கற்றுத் தருவதில் தயக்கம் காட்டு கின்றனர். அப்படியே சிலர் சொல் லிக் கொடுத்தாலும் முக்கியமான விஷயங்களைக் கற்றுக்கொடுப் பதில் ரகசியம் காக்கின்றனர். அவர்களுடைய பிள்ளைகளுக்கா வது சொல்லித் தருகிறார்களா என்றால் அதுவும் இல்லை. நான் படும் கஷ்டம் என்னோடு போகட்டும் எனக்கூறி, அவர்களை நகரங்களுக்கு வேலைக்கு அனுப்பு கின்றனர்.
ராஜா-ராணி பொம்மை செய் வோர்களில் பலர் இன்றும் குடிசை களில் வாழ்கின்றனர். நம்மூரில் தயாரிக்கப்படும் கலை நுணுக்கம் நிறைந்த பொருட்களுக்கு வெளி நாடு, பெரு நகரங்களில் நல்ல விலை கிடைக்கிறது. இவற்றை மதிப்புக் கூட்டி, சந்தைப்படுத்தும் முறை யைப் பின்பற்றினால், அழிந்து வரும் இத்தொழிலை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல லாம். இதுவரை 12-க்கும் மேற்பட் டோருக்கு பொம்மை தயாரிப்பை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ் வாதாரத்துக்கு வழிசெய்துள்ளேன்.
இவ்வாறு கீதாகுணா கூறினார்.
எது தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை?
தஞ்சாவூர் என்றாலே பெரிய கோயிலுக்கு அடுத்து, நினைவுக்கு வருவது தலையாட்டி பொம்மைதான். எப்படிக் கவிழ்த்தாலும், உருட்டிவிட்டாலும் தலையை நிமிர்த்தி எழுந்து கம்பீரமாக நிற்கும் ராஜா-ராணி பொம்மையை பார்க்கும்போதே மனதில் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இதுவும், வயதான தோற்றத்தில் தாத்தா-பாட்டி ஜோடியாக தலையை மட்டும் ஆட்டும் பொம்மையும் தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்டவை. இவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளனர். தலை, உடல், இடுப்பு பகுதி அனைத்தும் தனித்தனியே ஆடும் விதமாக இருக்கும் (டான்சிங் டால்) நடனமங்கை பொம்மை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வகையில் சேராது. ஆனால், தலையை ஆட்டுவதால் இதையும் தஞ்சாவூர் பொம்மை லிஸ்டில் சேர்த்துவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT