Published : 06 Nov 2020 07:57 PM
Last Updated : 06 Nov 2020 07:57 PM

பெண் சிசு கருச்சிதைவு; ஸ்கேன் மையங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை: மாநில வளர்ச்சிக் குழு கூட்டத்தில் முடிவு  

சென்னை

பெண் சிசுக்கொலையைத் தடுப்பதற்கான முறையில் பெண் சிசு கருச்சிதைவுக்கு வழிவகுக்கும் கருவின் பாலினம் அறியும் தொழில்நுட்பங்களை, முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, ஸ்கேன் மையங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில வளர்ச்சிக் குழுத் தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த தமிழக அரசின் மாநில வளர்ச்சிக் குழு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவர் பொன்னையன் தலைமையில், "கருவுறுதலுக்கு முன் பிறப்பதற்கு முந்தைய கருவின் தன்மையறியும் தொழில்நுட்ப முறைகள் (பாலினத் தேர்வைத் தடை செய்தல்) சட்டம்" (PC& PNDT Act ) குறித்த கொள்கை மறு ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின், உறுப்பினர் செயலர் (முழுக் கூடுதல் பொறுப்பு) அதுல் ஆனந்த், கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி அறிமுக உரையாற்றினார். இக்கூட்டத்தில் இச்சட்டத்தைச் செயல்படுத்தும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.

கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்பதற்கு முந்தைய கருவின் தன்மையறியும் தொழில்நுட்ப முறைகள் (பாலினத் தேர்வைத் தடை செய்தல்) சட்டம், 1994 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழக அரசால் 1996 முதல் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை மூலமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இச்சட்டம், கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்பதற்கு முந்தைய பாலினத் தேர்வைத் தடை செய்வதோடு, மரபணு ஒழுங்கீனம், வளர்சிதை ஒழுங்கின்மை, இனக்கீற்று ஒழுங்கீனம், சில பிறவிக் குறைபாடு அமைப்பு மற்றும் பாலினம் தொடர்பான ஒழுங்கின்மைகளைக் கண்டறிவதற்காக, கருவின் தன்மையறியும் தொழில்நுட்ப முறைகளை ஒழுங்குமுறைப்படுத்தி, பெண் சிசு கருச்சிதைவுக்கு வழிவகுக்கும் கருவின் பாலினம் அறியும் தொழில்நுட்பங்களை, முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கிறது.

தமிழகம் மற்றும் தேசிய அளவில் பொது மற்றும் சிறார் பாலின விகிதம் தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. பொதுக் கணக்கெடுப்பு 2001 மற்றும் 2011க்கான இடைப்பட்ட காலத்தில் பொது மற்றும் சிறார் பாலின விகிதங்களில் தமிழகம் முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும், மாவட்டங்களிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வுகளால், மாநிலம் நேர்மறையான பாலின விகிதத்தினை எய்திட வேண்டியுள்ளது.

2001 ஆம் ஆண்டில் தருமபுரி, சேலம், நாமக்கல், தேனி மாவட்டங்களில் பெண் சிசுக்கொலை மற்றும் கருக்கலைப்பு காரணமாக குறைந்த சிறார் பாலின விகிதம் இருந்தது. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுடன் கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திண்டுக்கல், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் சிறார் பாலின விகிதம் குறைவாகக் காணப்படுகிறது.

கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சிறார் பாலின விகிதம் 900க்கும் குறைவாக உள்ளது. குறைந்த பாலின விகிதம் என்பது பாலினப் பாகுபாடு சிக்கல் மட்டுமல்லாது மக்கள் சமூக சமநிலையையும் பாதிக்கின்ற ஒன்றாகவுள்ளது.

கருவிலுள்ள பெண் சிசுக்கொலையைத் தடுப்பதற்கான வழிவகைகள் பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் டாக்டர் எஸ்.குருநாதன், தமிழ்நாட்டில் இச்சட்டத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கினார். கள நிபுணர்களும், இச்சட்டம் குறித்த தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

துணைத்தலைவர் பொன்னையன் தமது உரையில், “நமது மாநிலம் இச்சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி வந்தாலும், சமூகத்தில் நிலவும் பிற்போக்கான சில பண்பாடு சமூகப் பழக்கங்கள் சிறார் பாலின விகிதத்தினை உயர்த்தத் தடையாக உள்ளன.

அங்கீகரிக்கப்படாத ஸ்கேன் சோதனை மையங்களுக்கு (scan centres) எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இம்மையங்களை முறைப்படுத்துவதற்கான நெறிமுறைகளை வரையறுக்க வேண்டும். தமிழகம் குழந்தைகளைக் காக்கும் உரிய விழிப்புணர்வு திட்டங்களையும், குறிப்பாக பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கான முன்னோடி திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தினைப் பெண்மையின் உரிமையாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன், இச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துதலில் பிற நாடுகள் மற்றும் மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படும் சிறந்த செயல்பாடுகளைத் தமிழகத்திலும் பின்பற்றிட உரிய துறைகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

இச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆகியோரின் நிபுணத்துவம் மற்றும் ஓத்துழைப்பைப் பெறுவதற்கான கூட்டாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் இச்சட்டத்தினை மேலும் சிறப்பாகச் செயல்படுத்திட பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இப்பரிந்துரைகள் உரிய நடவடிக்கைக்காக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்”.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x