Published : 06 Nov 2020 07:10 PM
Last Updated : 06 Nov 2020 07:10 PM
பாஜகவின் வேல் யாத்திரை கடும் விவாதத்தைக் கிளப்பி இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் துடைப்பம் யாத்திரை நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் அறிவித்திருக்கிறார்.
இந்தப் போராட்டம் எதற்காக? என்பது உள்ளிட்ட கேள்விகளுடன் 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்காக அவருடன் உரையாடினோம்.
தமிழக பாஜக வேல் யாத்திரை நடத்தும் சூழலில், திடீரெனத் துடைப்பம் யாத்திரை நடத்தப்போவதாக நீங்கள் அறிவித்திருப்பது ஏன்?
முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், பாஜகவின் யாத்திரைக்கும் எங்களது யாத்திரைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நாங்கள் நடத்தப்போவது சாதி, மத, இன உணர்வுகளைத் தூண்டுவதற்காக நடத்தப்படும் யாத்திரை அல்ல. ஏற்கெனவே டெல்லியில் ஜாட் யாத்திரையை அரவிந்த் கேஜ்ரிவால் நடத்தினார். அதன் தொடர்ச்சிதான் இது. முழுக்க முழுக்க லஞ்ச, ஊழலுக்கு எதிராக இந்த யாத்திரையை நடத்தப் போகிறோம்.
தமிழக வாழ்வாதாரப் பிரச்சினைகள் எத்தனையோ இருக்கும்போது, லஞ்சம், ஊழலை மட்டும் எதிர்த்துப் போராடுவது ஏன்?
ஏற்கெனவே 8 வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிராகப் போராடி நானும், எங்கள் கட்சியினரும் 10 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறோம். என்னைப் பொறுத்தவரையில் தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்சினை லஞ்ச, ஊழல்தான்.
இந்தியாவில் தமிழகத்தைப் போல லஞ்சமும், ஊழலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக மாறிய மாநிலம் எதுவும் இல்லை. இங்கே எந்தத் திட்டம் போட்டாலும் அதில் பாதிக்குப் பாதி பணத்தைக் கொள்ளையடித்து விடுகிறார்கள். இந்தக் கரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு முழுச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும்கூட அவர்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தவில்லை. இதனால் தமிழகத்தில் ஏழைகள் முதல் செல்வந்தர்கள் வரையில் அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தக் கொள்ளையை எதிர்த்துப் போராடுவதில்லை. எனவே லஞ்ச, ஊழலைத் துடைத்தெறிவதற்காக நாங்கள் இந்தத் துடைப்ப யாத்திரையை நடத்தப் போகிறோம்.
இந்தப் போராட்ட அறிவிப்பை எனது முகநூல் பக்கத்தில்தான் வெளியிட்டேன். கட்சி சார்பில் அறிக்கையாக வெளியிடவில்லை. அப்படியிருந்தும் தமிழகம் முழுக்க அதற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்க்கும்போது, மக்கள் எந்த அளவிற்கு லஞ்சம், ஊழலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் புரிந்துகொள்ள முடிகிறது.
உங்கள் கட்சி ஆளும் டெல்லியில் லஞ்சம், ஊழலே இல்லையா?
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டைப் போல அரசு நடத்துவதே கொள்ளையடிப்பதற்காகத்தான் என்று எந்த மாநிலத்திலும் ஒரு ஆட்சி இல்லை. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஒரு பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கினால், திட்ட மதிப்பீட்டைவிடக் குறைந்த செலவில் பாலத்தைக் கட்டி மீதித்தொகை அரசின் கஜானாவிலேயே சேர்க்கப்படுகிறது. இங்கே பாலங்களும், மருத்துவக் கல்லூரிக் கட்டிடங்களும் கட்ட ஒதுக்கப்படுகிற நிதியில் 50 சதவீதம் கமிஷனுக்கே போய்விடுவதால், கட்டிக்கொண்டிருக்கும் போதே அவை இடிந்து விழுகின்றன.
லஞ்சம், ஊழலை ஒழித்து, மக்கள் பணம் மக்களுக்கே என்று செயல்படுவதால்தான் டெல்லி அரசு, இந்தியாவிலேயே கடனே இல்லாத மாநில அரசாகத் திகழ்கிறது.
தேர்தல் வந்தால்தான் தமிழகத்தில் ஆம் ஆத்மி என்றொரு கட்சி இருப்பதே வெளியே தெரிகிறது. இந்தத் தேர்தலில் உங்கள் இலக்கு என்ன?
நாங்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஊடகங்கள்தான் எங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தமிழகத்தில் நாங்களும், பாஜகவும் சம பலமுள்ள கட்சிகள். ஆனால், அவர்கள் மத்தியில் ஆட்சி செய்வதால் அவர்கள் என்னமோ பெரிய கட்சி போல ஊடகங்கள் சித்தரிக்கின்றன. கடந்த மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நான் போட்டியிட்டேன். வெறும் ஆயிரம் வாக்குகள்தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், 20 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. இப்போது எங்களது கட்சி வளர்ந்திருக்கிறது. தேர்தல் அனுபவங்களைப் பெற்ற கட்சியாக இருக்கிறது. எனவே, இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்தோ, கூட்டணி அமைத்தோ போட்டியிடுவோம்.
தமிழகத்தின் ஆம் ஆத்மியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியைத்தான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள். அப்படி இருக்கையில் எந்த நம்பிக்கையில் நீங்கள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வீர்கள்?
தமிழக ஆம் ஆத்மி மாநில ஒருங்கிணைப்பாளராக நான் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், மு.க.ஸ்டாலினோ, இபிஎஸ், ஓபிஎஸ்ஸோ தலைமைப் பொறுப்புக்கு வந்து சில ஆண்டுகள்தான் ஆகின்றன. கருணாநிதி, ஜெயலலிதா எனும் இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் அவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்ததே கிடையாது. ஸ்டாலினும் சரி, எடப்பாடியும் சரி மக்களை ஈர்க்கும் தலைவர்கள் இல்லை.
கரோனா காரணமாக, வரும் தேர்தலில் பெருங்கூட்டம் நடத்த முடியாது. திமுக, அதிமுகவுக்கு இணையாக எங்களாலும் இணைய வழிக் கூட்டம் நடத்த முடியும். ஆக, இந்தத் தேர்தல்தான் உண்மையிலேயே சம போட்டி. மக்கள் திராவிடக் கட்சிகளின் ஊழல் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். எனவே, எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம். அதற்கேற்றபடி கூட்டணி அமைப்பது குறித்து எங்கள் கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்.
இவ்வாறு வசீகரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT