Last Updated : 22 Oct, 2015 09:13 AM

 

Published : 22 Oct 2015 09:13 AM
Last Updated : 22 Oct 2015 09:13 AM

அரசின் இரட்டை கொள்கையால் பருப்பு விலை ஏற்றம்: வணிகர்கள் சங்கம் குற்றச்சாட்டு

பருப்பு விலை உயர்வுக்கு அரசின் இரட்டை கொள்கையே காரணம் என சேலம் மாநகர அனைத்து வணிகர்கள் சங்க பொதுச் செயலாளர் ஏ.ஜெயசீலன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறிய தாவது: துவரம் பருப்பு கடந்த ஆண்டு ரூ.90 வரை விற்பனையா னது. பருப்பு பற்றாக்குறையும், சந்தை தேவையின் காரணமாகவும் பருப்பு விலை மளமளவென ரூ.220 வரை விலை ஏற்றம் கண்டுள்ளது. உளுத்தம் பருப்பு ரூ.200-ஐ தொட்டு விட்டது. பாசிப் பருப்பு ரூ.170-ஐ எட்டி பிடித்து விட்டது. கடந்த 25 ஆண்டுகளில் எந்த வியாபாரியும் சந்திக்காத வகையில் பருப்பு விலை ஏற்றம் கண்டுள்ளது.

இதற்கு அரசின் இரட்டை கொள்கை முடிவே காரணம் என கூறலாம். அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் பருப்பு விளைவிக்கும் விவசாயிகளுக்கும், ஏக்கருக்கு ஏற்ற வகையில் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் பருப்புக்கு ஆதரவு விலை அளித்து கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 1975-ம் ஆண்டு பருப்பு குவிண்டாலுக்கு 1,700 ரூபாய் ஆதரவு விலை அளித்த அரசு, நடப்பாண்டு ரூ.4,850 ரூபாய் ஆதரவு விலை கொடுத்து வாங்குகிறது.

நெல், கரும்பு, பருப்பு, பால் என அரசு நேரடியாக பொருளுக்கு ஆதரவு விலை அளிக்கும் போது, வெளி மார்க்கெட் வியாபாரிகள் அரசு நிர்ணயித்த தொகையை காட்டிலும் கூடுதல் தொகைக் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. சரக்கு கட்டணம், வரி, லாரி போக்குவரத்து, வேலையாள் கூலி என ஒரு மூட்டை பருப்பை கொண்டு வந்து சேர்க்கும் போது, அதன் விலை அதிகரிக்கிறது.

100 கிலோ கொண்ட பருப்பு மூட்டையை சுத்தம் செய்தால் 75 கிலோ கிடைக்கும் போது, பற்றாக் குறை 25 கிலோ பருப்புக் கான விலையையும் பொருட்கள் மீது சுமத்த வேண்டியுள்ளது. இது போன்ற சூழலில் பருப்பு விலையை வெளி மார்க்கெட் வியாபா ரிகள் குறைக்க வேண்டும் என அரசு இருவித கொள்கையை கையாள் வது முரண்பாடாய் உள்ளது.

பருவநிலை பாதிப்புகளை வேளாண் மற்றும் புள்ளியியல் துறை அதிகாரிகள் கூர்ந்து கண்காணித்து, அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு மற்றும் பற்றாக்குறை குறித்தும் மாற்று ஏற்பாடு குறித்தும் மத்திய அரசின் கவனத்துக்கு முன் கூட்டியே எடுத்துச் சென்றிருக்க வேண்டும். அதை செய்யத் தவறியதாலும், வெளிநாடுகளில் இருந்து முன் கூட்டியே பருப்பை அதிகளவு கொள்முதல் செய்ய தவறியதாலும் பருப்பு விலை ஏற்றம் கண்டது என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x