Last Updated : 06 Nov, 2020 04:36 PM

1  

Published : 06 Nov 2020 04:36 PM
Last Updated : 06 Nov 2020 04:36 PM

காணொலி வாயிலாக பேசுவதால் நாட்டில் என்ன நடக்கிறது என்று ஸ்டாலினுக்குத் தெரியவில்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்

விழுப்புரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம்.

விழுப்புரம்

காணொலி வாயிலாக பேசுவதால் நாட்டில் என்ன நடக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத் தெரியவில்லை என, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

விழுப்புரத்தில் இன்று (நவ. 6) கூட்டுறவுத்துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"25 ஆயிரத்து 456 பேருக்கு 150 கோடியே 91 லட்சம் மதிப்பில் இம்மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன. திமுக சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. திமுக ரூ.7,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக சொன்னது. ஆனால், அவர்கள் பயிர்க்கடன் ரூ.3,992 கோடி உட்பட மத்திய காலக்கடனையும் சேர்த்து, ரூ.5,368 கோடி தள்ளுபடி செய்துள்ளனர்.

ஆனால், அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.5,319 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.87 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக அரசு சிறு, குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.

பழனிசாமி முதல்வரான பின்பு ரூ.29 ஆயிரத்து 817 கோடி பயிர்க்கடன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் ரூ.9,136 கோடி பயிர்க்கடன் கொடுத்துள்ளனர். இதை சட்டப்பேரவையில் புள்ளிவிவரத்தோடு சொல்லியுள்ளோம். கடந்தாண்டை விட இந்தாண்டு கூடுதலாக ரூ.832 கோடி கூடுதலாக கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு நிர்வாகத்தில் இந்தியாவில் 2-வது சிறந்த அரசாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றை தமிழகம் சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவினர் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசிவருகின்றனர். அவர்கள் மக்களை நேரடியாக சந்திப்பதில்லை. முதல்வர் மாவட்டம், மாவட்டமாக மக்களை சந்தித்து வருகின்றார்.

நெல்லுக்கான ஆதாரவிலை குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், வெளிச்சந்தையைவிட விலை கூடுதலாக கொடுப்பதால்தானே விவசாயிகள் கொள்முதல் நிலையங்களை நாடுகின்றனர்.

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில்தான் வங்கிகள் வரவேண்டும் என்பது சட்டம். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் உள்ளது. இது கூட்டுறவு சட்டத்திற்கு எதிராக உள்ளதால் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.

வெங்காயம் வெளிமாவட்டங்களில் இருந்து வருவது காலதாமதமாகிறது. வெளிமாநிலங்களில் மழை பெய்வதால் காலதாமதமாகிறது. 316 மெட்ரிக் டன் வெங்காயம் வாங்கப்பட்டுள்ளது. தேசிய உற்பத்தி கழகத்தில்தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு டிவிடெண்ட் கொடுப்பது அந்தந்த சங்க நிர்வாகத்தின் உரிமை. அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை".

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:

"7 பேர் விடுதலை விவகாரத்தில் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பேரறிவாளன் நீதிமன்றத்தில் கொடுத்த மனு குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று சொன்னபின்பு, பல்நோக்கு விசாரணை ஆணையம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதை அறிய அறிக்கைக்காக காத்திருப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால், 7 பேர் விடுதலைக்கும், பல்நோக்கு விசாரணை ஆணையத்திற்கும் சம்பந்தமில்லை, ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்.

தமிழக உரிமைகளுக்குப் போராடுவதாகக் கூறும் திமுக எந்த உரிமையை மீட்டுள்ளது? சேவை வரியை கொண்டுவந்தது திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியாகும்.

மதிப்பு கூட்டுவரியை அமல்படுத்த மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியவர் ஜெயலலிதா. அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, மதிப்பு கூட்டுவரியை அமல்படுத்தியது.

அறைக்குள் இருந்தே காணொலிக் காட்சி மூலம் பேசுவதால் நாட்டில் என்ன நடக்கிறது என்று ஸ்டாலினுக்குத் தெரியவில்லை. அவர் நிலையை நினைத்தால் பாவமாக உள்ளது. வாய்ப்பந்தல் போடுவதில் திமுகவினர் வல்லவர்கள். தமிழகத்தின் உரிமைகளை மீட்டு கொடுத்தது அதிமுக அரசுதான்".

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x