Published : 06 Nov 2020 04:07 PM
Last Updated : 06 Nov 2020 04:07 PM
பில்லூர்-3, திருப்பூர்-4 திட்டங்களால், பவானி ஆற்றின் 17 குடிநீர்த் திட்டங்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்று மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்புக் குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர்.
பவானி ஆற்றில் இருந்து ஏற்கெனவே 17 திட்டங்களுக்கு தண்ணீர் உறிஞ்சப்படுவதால், புதிதாக கொண்டுவரப்படும் பில்லூர்-3, திருப்பூர்-4 திட்டங்களால் அனைத்து திட்டங்களும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பவானி ஆற்றில் இருந்து கவுண்டம்பாளையம், திருப்பூர், அவிநாசி, அன்னூர் உட்பட 17 குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திட்ட அளவின்படி சுமார் 106 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதிதாக பில்லூர் 3-வது குடிநீர்த் திட்டம் மற்றும் திருப்பூர் 4-வது குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்றப்பட பணிகள் நடைபெற்று வருகின்றன. பவானி ஆற்றின் நீரோட்டம் குறித்த கணக்கீட்டின்படி, ஆற்றின் குறைந்தபட்ச நீர் வரத்து 74 மில்லியன் லிட்டர் ஆகும்.
அந்த நேரத்தில் எந்த குடிநீர்த் திட்டத்திற்கும் தண்ணீர் கிடைக்காது என்றும், பவானி ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்கின்றனர், அப்பகுதி மக்கள்.
இது குறித்து மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாஷா கூறும்போது, 'புதிதாகத் தொடங்கப்பட உள்ள பில்லூர் 3-ம் குடிநீர்த் திட்டத்திற்கு 295 மில்லியன் லிட்டர் தண்ணீரும், திருப்பூர் 4-வது குடிநீர்த் திட்டத்திற்காக 196 மில்லியன் லிட்டர் தண்ணீரும் என மொத்தம் 597 மில்லியன் லிட்டர் தண்ணீர் பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் என்று திட்ட அளவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நீர் வரத்து குறைந்துவரும் நிலையில், தண்ணீர் எடுத்தால் எந்தத் திட்டத்திற்கும் போதுமான நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுவிடும். எனவே புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் ஏற்கெனவே உள்ள திட்டங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இதற்கு மாற்றாக பவானி சாகர் நீர்த் தேக்கப்பகுதியைப் பயன்படுத்தலாம். இதனால் ஏற்கனவே செயல்பட்டு வரும் குடிநீர்த் திட்டங்களும் பாதிக்காது. மேலும் புதிய குடிநீர்த் திட்டங்களுக்கும் வருடம் முழுவதும் போதுமான தண்ணீர் கிடைக்கும். மேலும், மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளது. எனவே இந்தப் பகுதிகளுக்கு விளாமரத்தூர் பகுதியில் இருந்து சீரான மற்றும் தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகிறோம்' என்றார்.
மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் கூறும்போது, 'பவானி ஆற்றின் கரையோரம் விவசாயம் அதிகமாக நடந்து வருகிறது. சென்ற ஆண்டு ஆற்று நீர் குறைவாக வந்ததால் விவசாயிகள் ஆற்று நீரைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. பவானி ஆற்றில் குறைந்தபட்ச நீரோட்டம் இல்லாவிட்டால், இந்த ஆற்றுப் பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பெரும் பாதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பில்லூர் 3, திருப்பூர்-4 குடிநீர்த் திட்டங்களால் இப்பகுதியில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும். இதற்கு மாற்றாகப் பவானி சாகர் தண்ணீரைப் பயன்படுத்தத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT