Last Updated : 05 Nov, 2020 09:07 PM

 

Published : 05 Nov 2020 09:07 PM
Last Updated : 05 Nov 2020 09:07 PM

அனைத்து வித ஆன்லைன் சூதாட்டங்களும் தடை செய்யப்படும்: கோவையில் முதல்வர் அறிவிப்பு

கோவைக்கு வந்த முதல்வர் கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசிய போது எடுத்த படம். படம் : ஜெ.மனோகரன்

கோவை

அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படும் என்று கோவையில் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.

நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்தும், அரசு அறிவித்த திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்ய தமிழக முதல்வர் கே.பழனிசாமி இன்று (நவ.5-ம் தேதி) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். கோவை வந்த அவரை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஆட்சியர் கு.ராசாமணி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து முதல்வர் கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக மக்கள் வைத்த கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. ரூ.214 கோடி மதிப்பில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு காந்திபுரத்தில் 2 அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ரூ.120 கோடி மதிப்பில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு உக்கடத்திலும், ரூ.253 கோடி மதிப்பில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சுங்கத்திலும், ரூ.66 கோடி மதிப்பில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கவுண்டம்பாளையத்திலும், ரூ.42 கோடி மதிப்பில் 670 மீட்டர் தூரத்துக்கு கவுண்டர் மில் சந்திப்புப் பகுதியிலும், ரூ.16 கோடி மதிப்பில் கணபதி - கண்ணப்பன் நகர் ரயில்வே மேம்பாலம், ரூ.55 கோடி மதிப்பில் 580 மீட்டர் தூரத்துக்கு ஆவாரம்பாளையத்தில் ரயில்வே மேம்பாலம் ஆகியவை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.1,100 கோடி மதிப்பில் உயர்மட்டப் பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும்.

சிட்ரா- குரும்பபாளையம் சாலை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரிவுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.25 கோடி மதிப்பில் காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து நூறடி சாலை, பாரதியார் சாலைகளில் இறங்கு தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.50 கோடி மதிப்பில் லாலி ரோடு சந்திப்புப் பகுதியில் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. ரூ.25 கோடி மதிப்பில் கோவில்பாளையம் - துடியலூர் ரயில்வே மேம்பாலப்பணி விரைவில் செயல்படுத்தப்படும். 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.320 கோடி மதிப்பில் மேற்கு வட்டச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆன்லைன் ரம்மிக்குத் தடை

ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யப் பல தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த இணையவழி ரம்மி சூதாட்ட விளையாட்டினால் பலர் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும். இதுதொடர்பான வழக்கும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நடந்து வருகிறது. அங்கே அரசு சார்பில் இந்த விளையாட்டைத் தடை செய்யப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்ற பதிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தரப்பட்ட மக்களின் கருத்துகளின் அடிப்படையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இணையப் பயன்பாடு அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இளைஞர்கள் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கும் வகையில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகள் அவர்களது வாழ்க்கையைச் சீரழித்து வருகின்றன. பொதுமக்களின் நன்மை கருதி இவ்வாறு பணம் வைத்து நடத்தப்படும் அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்வதோடு, சூதாட்ட விளையாட்டுகளை நடத்துபவர்கள், அதில் ஈடுபடுபவர்களைக் குற்றவாளிகளாகக் கருதி கைது செய்யும் வகையில் உரிய சட்ட திருத்தத்தை அரசு மேற்கொள்ளும்.

கோவைக்கு வந்த முதல்வர் கே.பழனிசாமி தொண்டர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு வரும் காட்சி. படம்: ஜெ.மனோககரன்

திரைப்பட நடிகர் விஜய் கட்சி தொடங்குவது அவரது உரிமை. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் கைதான 7 பேரின் விடுதலை ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அவர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 பேரின் விடுதலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். 2000-ம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது, 7 பேர் விடுதலை தொடர்பான கோரிக்கை வந்தபோது, அவர்களது அமைச்சரவையில் நளினியைத் தவிர்த்து மற்றவர்களின் கோரிக்கையை நிராகரித்தனர். இவர்களுக்கு தண்டனை கொடுக்கலாம் என அமைச்சரவையில் திமுகவினர் முடிவு எடுத்தனர். இந்த நிலையில் அதிமுக ஆட்சியின் போது, 7 பேரையும் விடுதலை செய்ய அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. தீர்மானம் நிறைவேற்றியது. 7 பேரின் விடுதலையில் அதிமுக அரசு அக்கறையுடன் செயல்படுகிறது.

வேல் யாத்திரை

தமிழகத்தில் வேல் யாத்திரைக்குச் சட்ட ரீதியில் அனுமதி அளிக்க முடியாது. ஊரடங்கு காலத்தில் ஊர்வலம் நடத்தக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றியுள்ளன. அந்தச் சட்டத்தின்படி வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பாக நாங்கள் பதில் கூற முடியாது. யாரோ ஒட்டும் போஸ்டருக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்.

பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள், பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது பள்ளி, கல்லூரிகள் திறந்தால் பாதிப்பு ஏற்படும் என பத்திரிகைகள் வாயிலாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தை நடத்தி, அதில் எடுக்கும் முடிவு செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x