Published : 05 Nov 2020 08:27 PM
Last Updated : 05 Nov 2020 08:27 PM
தமிழக முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி வருவதற்கு தயங்குவது ஏன், மக்களைப் பார்த்து பயமா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
திமுக சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்துக்கான தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை, மீன்வளக் கல்லூரி, கடல்சார் பயிற்சி மையம், மாநகராட்சி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பத்திரப்பதிவு அலுவலகம் போன்ற ஏராளமான திட்டங்கள் வந்தது திமுக ஆட்சி காலத்தில் தான். ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு செய்த சாதனைகள் என்று ஏதையாவது சொல்ல முடியுமா?
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொலை செய்தார்களே, அதை சொல்லவா? சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற தந்தை மகனை அடித்தே கொலை செய்த அநியாயத்தை சொல்வதா? சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த செல்வன் என்ற இளைஞரை ஆளும்கட்சி பிரமுகரும், போலீஸாரும் சேர்ந்து கொலை செய்த அவலத்தை சொல்வதா?
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய சொந்த நாட்டு மக்களை திட்டமிட்டு சுட்டுக் கொன்றவர்களை மக்கள் அரசாங்கம் என்று சொல்ல முடியுமா? 13 அப்பாவி மக்களை கொலை செய்த அதிமுக அரசுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டாமா.
இந்த கொலைக்கு முதல்வர் பழனிசாமி தான் காரணம். ஆனால், ஆறுதல் சொல்ல தூத்துக்குடி அவர் வந்தாரா, ஏன் வரவில்லை, என்ன பயம்? தூத்துக்குடிக்கு பழனிசாமி வருவதை எது தடுத்தது?
துப்பாக்கிச் சூடு நடந்ததே தனக்கு தெரியாது, டிவியைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என முதல்வர் சொன்னாரே. உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் இவ்வாறு சொல்லியது வெட்கக்கேடானது.
அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் தான் சுடச்சொன்னார். ஆனால், தெரியாது என நாடகமாடினார். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. 36 மாதங்கள் ஆகியும் ஆணையத்தின் அறிக்கை இதுவரை வெளிவரவில்லை. உண்மையான குற்றவாளி யார் என வெளியே தெரிந்துவிடும் என்பதற்காக ஆணையத்தை அப்படியே முடக்கிவிட்டார்கள்.
துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுதிக்கேற்ற சரியான வேலை கொடுக்கப்படவில்லை. தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை கொடுங்கள் என அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் போலீஸார் அடித்தே கொன்றனர். ஆனால், உடல் நலக்குறைவாக அவர்கள் இறந்ததாக முதல்வர் அறிக்கை வெளியிட்டார். இதைவிட அப்பட்டமான பொய் இருக்க முடியாது. திமுக கொடுத்த நெருக்கடி காரணமாகவே இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
போலீஸார் அடித்ததால் தான் தந்தை, மகன் இறந்ததாக சிபிஐ விசாரணையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதான் பழனிச்சாமி ஆட்சியின் லட்சணம். இத்தகைய பழனிச்சாமி முதல்வராக நீடிக்கலாமா.
இதனால் தான் முதல்வர் தூத்துக்குடிக்கே வருவதற்கு தயங்கி கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல்வர் பழனிச்சாமி வருவதாக இருந்தது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டம் வரை வந்த முதல்வர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரவில்லை.
அதன் பிறகு அக்டோபர் 13-ம் தேதி தூத்துக்குடிக்கு முதல்வர் வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது தாயார் மரணமடைந்த காரணத்தால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
அதன்பிறகு அக்டோபர் 29-ம் தேதி வருவதாக தெரிவிக்கப்பட்டு, அதுவும் ரத்து செய்யப்பட்டது. தற்போது புதிய தேதியை குறித்திருப்பதாக சொல்கிறார்கள்.
எதற்காக முதல்வர் தூத்துக்குடிக்கு வர முடியவில்லை, என்ன தயக்கம். 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முதல்வர் வரவில்லை. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லவும் வரவில்லை.
தற்போது மூன்றாவது முறையாகவும் அவரால் வரமுடியவில்லை. தூத்துக்குடி நிகழ்ச்சியை தொடர்ந்து தள்ளிப்போட என்ன காரணம், மக்களை பார்த்து பயமா?
மக்களை பார்க்கிறதுக்கு என்ன பயம். பிரதமரை பார்த்து எதற்காக பயம். ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுப்பதில் என்ன பயம். மடியில் கனம், அதனால் வழியில் பயம். அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த முழுமையான பட்டியலை மத்திய பாஜக அரசு தயாரித்து வைத்துள்ளது. அதனால் தான் மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் முதல்வர் தலையாட்டிக் கொண்டிருக்கிறார்.
டெல்லி கேட்கிற கப்பத்தை கட்டிக் கொண்டிருக்கிறார். பாஜக நேர்மையுடன் இந்த பட்டியலை தயாரித்து வைக்கலில்லை. அதிமுக அரசை மிரட்டுவதற்காகவே தயார் செய்து வைத்துள்ளனர்.
இதனால் விவசாயிகள், நெசவாளர்கள், வியாபாரிகள், மீனவர்கள் என எல்லோருக்கும் முதல்வர் துரோகம் செய்து வருகிறார். இந்த துரோக கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போர் தான் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல். மக்களவை தேர்தலை போன்று சட்டப்பேரவை தேர்தலிலும் முழுமையான வெற்றியை திமுக கூட்டணிக்கு மக்கள் அளிக்க வேண்டும்.
முழு வெற்றியை பெறும் போது தான் முழு நன்மையையும் மக்கள் பெற முடியும். மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர வைக்க வேண்டும். தமிழகத்தை மீட்க வேண்டும். கருணாநிதியின் கனவை நினைவேற்ற வேண்டும் என்றார் ஸ்டாலின்.
பொதுக்கூட்டத்துக்கு கனிமொழி எம்பி முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வடக்கு மாவட்ட திமுக சார்பில் 350 பேர், தெற்கு மாவட்ட திமுக சார்பில் 621 பேர் என 971 திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளிகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மேலும், இந்த தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் வடக்கு மாவட்டத்தில் 147 இடங்களிலும், தெற்கு மாவட்டத்தில் 69 இடங்களிலும் என மொத்தம் 216 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT