Published : 05 Nov 2020 06:15 PM
Last Updated : 05 Nov 2020 06:15 PM
கிரானைட் கொள்ளையின் மூலம் தமிழக அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பையும், விவசாயிகள் மற்றும் குடியிருப்புவாசிகளுக்கு ஏராளமான தொல்லைகளையும் கொடுத்ததால் மூடப்பட்ட கிரானைட் குவாரிகளை மீண்டும் திறக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக மதுரை அதிமுக, திமுக, பாஜக நிர்வாகிகள் மும்முரமாக வேலை செய்வதாகப் புகார் எழுந்திருக்கிறது.
மதுரை மாவட்டத்தில் 2012 வரையில் சுமார் 60 கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வந்தன. அதில் பல குவாரிகளில் உலகத் தரமான கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டு பெருமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆளுங்கட்சிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் முறைகேடாகவும், அரசு நிலங்களையும், விவசாய நிலங்களையும் அபகரித்தும் குவாரிப் பணிகள் நடப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருந்தன.
இந்த முறைகேடு நடந்திருப்பது உண்மைதான் என்றும், இதன் மூலம் சுமார் 16 ஆயிரம் கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் இருந்தபோது கூறினார். அவரைத் தொடர்ந்து மதுரை ஆட்சியரான அன்சுல் மிஷ்ராவும் கிரானைட் முறைகேடு வழக்கை விசாரித்து, அரசுக்கு 13 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தார். பி.ஆர்.பி. நிறுவன அதிபர் பழனிசாமி கைது செய்யப்பட்டதுடன், மு.க.அழகிரியின் மகன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் திமுகவினருக்கும் தொடர்பு இருந்ததால், அதிமுக அரசு தீவிரம் காட்டி அனைத்துக் குவாரிகளையும் முடக்கியது. உச்ச நீதிமன்றம் வரையில் சென்றும் மீண்டும் குவாரிகளைத் தொடங்க பி.ஆர்.பி. உள்ளிட்ட நிறுவனங்கள் முயன்றும் அது நடக்கவில்லை.
மீண்டும் திறப்பு?
இந்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கிரானைட் உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று கூடி, குவாரிகள் மூடப்பட்டதால் மதுரை மாவட்டத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்திருப்பதாகவும், அரசு அவற்றைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அந்தக் கோரிக்கையைப் பாஜக பகிரங்கமாக ஆதரித்தது. அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் குவாரியைத் திறக்க ஏற்பாடு செய்வோம் என்று மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
தேர்தலுக்குப் பிறகு இந்தப் பிரச்சினை அடங்கியிருந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் மீண்டும் கிரானைட் உரிமையாளர்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தத் தொடங்கினர். இது தொடர்பாக ஆளுங்கட்சியான அதிமுக, பாஜகவுடன், பிரதான எதிர்க்கட்சியான திமுகவினரையும் அவர்கள் சந்தித்தனர். இப்போது அந்தக் கோரிக்கை கனிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் கனிம வளத்துறையிலும், மதுரை மாவட்ட நிர்வாகத்திலும் முழு மூச்சாக நடக்கின்றன.
தேர்தல் நெருக்கத்தில் மதுரையில் குவாரிகள் செயல்பட அனுமதி கிடைத்துவிடும் என்றும் தெரிகிறது. அதேநேரத்தில், ஏற்கெனவே குவாரி அதிபர்களிடம் இருந்து விவசாய நிலங்களையும், பாசனக் கண்மாய், கால்வாய்களையும் மீட்டு விவசாயம் செய்து கொண்டிருப்போரும், குவாரி சத்தம் ஓய்ந்ததால் நிம்மதியாக இருந்த குடியிருப்புவாசிகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
போராட்டம்
இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் பேசிய கிரானைட் குவாரி எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், "மதுரையில் நடந்த குவாரி முறைகேட்டில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே பங்குண்டு என்றாலும், கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது கிரானைட் குவாரி முறைகேட்டை ஒழிப்பேன் என்று கொடுத்த வாக்குறுதியை, அடுத்த 2 ஆண்டுகளில் நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா.
அரசு எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாக, 8 ஆண்டுகள் ஆகியும் குவாரி மீதான தடையை உடைக்க முடியவில்லை. ஆனால், இப்போது ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாகச் சொல்வோரே குவாரிகளைத் திறப்பதில் மும்முரம் காட்டுகிறார்கள்.
மதுரையைச் சேர்ந்த அமைச்சர், திமுகவின் செல்வாக்கான எம்எல்ஏ, பாஜகவின் மாநில நிர்வாகி மூவரையும் சரிக்கட்டியுள்ள குவாரி உரிமையாளர்கள், அவர்கள் மூலமாக இந்த வேலைகளை வேகமாகச் செய்து வருகிறார்கள். தென்மாவட்டங்களில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல் செலவை ஏற்றுக்கொள்வதாகக் குவாரி அதிபர்கள் உறுதியளித்துள்ளார்கள். சிறுகட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடும் என்பதால், அவற்றுக்கும் தேர்தல் நிதி அளிக்க ஏற்பாடு நடக்கிறது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி, பல உயிர்களைத் தியாகம் செய்து குவாரிகளை மூட வைத்தோம். அந்த குவாரிகளைப் பணத்திற்காக அரசியல்வாதிகள் திறக்க முற்படுவது எங்கள் மக்களைக் கடுமையான கோபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. அரசு குவாரிகளைத் திறக்க அனுமதி அளித்தால், மேலூர் பகுதியில் கடுமையான போராட்டம் நடக்கும். அது தேர்தல் முடிவுகளிலும் எதிரொலிக்கும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT