Published : 05 Nov 2020 06:02 PM
Last Updated : 05 Nov 2020 06:02 PM
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்றபோது கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்தியது குறித்து செய்தியாளர்கள் கமலிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், எம்ஜிஆர் திரையில் செய்தபோது கேட்காமல் என்னை மட்டும் கேட்கிறீர்களே என எதிர்க் கேள்வி கேட்டார். அவர் செய்யாததை நான் செய்யவில்லை. நானும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் செய்வேன் என்று கமல் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கமல் அளித்த பேட்டி:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கட்சி, சின்னம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?
''மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்'', ''மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்'' என்று பாடினார் எம்ஜிஆர். அவரைக் கேட்காமல் என்னைக் கேட்கிறீர்களே. கட்சியின் தேர்தல் திட்டத்தை, ''நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்'' என்று பாடினார் எம்ஜிஆர். அது அவர் சொந்தப் படமல்ல. நாகிரெட்டியார் எடுத்த படம். அதேபோன்று எந்த இடம் கிடைத்தாலும் அதை நாங்கள் பயன்படுத்துவோம். கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் இரண்டும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது. எந்த மேடை கிடைத்தாலும் அங்கு நான் பேசுவேன். அது பேச்சுரிமை சம்பந்தப்பட்டது.
அரசியலுக்காக ஆன்மிக அரசியலை கமல் முன்னெடுக்கிறாரா?
நான் நாத்திகனல்ல, அது ஆத்திகர்கள் வைத்த பெயர். அதனால் அதை நான் ஏற்கவில்லை. நான் எனக்கென்று ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறேன். அது பகுத்தறிவாளன் என்பது ஆகும். உங்கள் பக்தியைப் புரிந்து கொள்கிறேன். உங்களுடன் நான் இணைந்து ஒரே இடத்தில் வாழவேண்டும் என்கிற பட்சத்தில் உங்கள் பக்தியைப் புரிந்துகொண்டு இடைஞ்சல் இல்லாமல் வாழ்வது எப்படி என்பதுதான் பகுத்தறிவு.
வெண்முரசு என்கிற நாவலை என் நண்பர் ஜெயமோகன் எழுதியபோது அந்த விழாவில் பேசுவேன். கலாச்சாரத்தை மதிப்பவன் நான். அதனால், எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அர்த்தம் அல்ல. ஆனால், அதை அறிந்து வைத்திருப்பேன். நமக்கு சாதி, மதப் பேதங்கள் கிடையாது. எங்களுக்கு சாதி கிடையாது. ஆனால் இருப்பதை மதிக்காமல் இருக்க முடியாது.
முதல்வரானால் உங்கள் முதல் கையெழுத்து என்ன?
பல்லில்லா லோக் ஆயுக்தாவுக்குப் பல் வைப்பதுதான். பல்லில்லாத சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும் பயனில்லை. ஆனால், அதற்குப் பல் வைத்தால் அதன் வேலையை அது பார்க்கும்.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT