Last Updated : 05 Nov, 2020 05:46 PM

 

Published : 05 Nov 2020 05:46 PM
Last Updated : 05 Nov 2020 05:46 PM

ஆதரவற்ற சடலங்களைப் புதைப்பவருக்கு ரூ.9 லட்சம் பாக்கி வைத்த புதுச்சேரி அரசு; 5 ஆண்டுகளாக அலைக்கழிக்கும் அவலம்

சந்திர குரு.

புதுச்சேரி

ஆதரவற்ற சடலங்களைப் புதைப்பவருக்கு புதுச்சேரி அரசு ரூ.9 லட்சம் பாக்கி வைத்துள்ளது. அதைப் பெற அவர் ஐந்து ஆண்டுகளாக அலைந்து வருகிறார்.

புதுச்சேரியில் ஆதரவற்ற சடலங்களைப் புதைக்கும் தொழிலைக் கடந்த 25 ஆண்டுகளாகச் செய்து வருபவர் சந்திர குரு (55). சாலையோரம், பேருந்து நிலையம், கடற்கரை, ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் கிடக்கும் ஆதரவற்ற சடலங்களைக் காவல்துறையின் உத்தரவின்பேரில் அப்புறப்படுத்தி வருகிறார். இவர் தொடர்ந்து கையில் 'பைண்டிங்' புத்தகங்களுடன் அமைச்சர்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறார். சடலங்களைப் புதைத்ததற்கு அரசு வைத்துள்ள பாக்கித் தொகையைப் பெறவே இம்முயற்சி என்கிறார்.

இதுபற்றி சந்திர குரு கூறுகையில், "ஆதரவற்ற சடலத்தை எடுத்துச் செல்லும் வாகனத்துக்கு 750 ரூபாயும் புதைப்பதற்கு 250 ரூபாயும் என ஒரு சடலத்துக்கு ஆயிரம் ரூபாயை அரசு நிர்ணயித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் இருந்து அறுவை சிகிச்சையால் அப்புறப்படுத்தப்படும் கை-கால் போன்றவற்றைப் புதைக்க ஐம்பது ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலில் தள்ளுவண்டி மூலம் சடலங்களை எடுத்து வந்தேன். பின்னர் சவ ஊர்தி மூலம் திப்புராயப்பேட்டை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று நானே குழி தோண்டிப் புதைக்கும் தொழிலைச் செய்கிறேன். சிறு வயதில் இருந்தே மயானத்தில்தான் வேலை செய்கிறேன். அரசு வேலை தருவதாகச் சொன்னார்கள். ஆனால், கிடைக்கவில்லை.

சடலங்களைப் புதைத்ததற்கு அரசு ரூ. 9 லட்சம் தர வேண்டியுள்ளது. அதற்கான பில்களைச் சேகரித்து வைத்துப் பார்த்தேன். பத்திரமாக வைக்க 'பைண்டிங்' செய்துவிட்டேன். 'பைண்டிங்' செய்யப்பட்ட பில் புத்தகத்துடன் ஒவ்வொரு அமைச்சரையும் சந்தித்துக் கோரிக்கை வைக்கிறேன். 5 ஆண்டுகளாக முயற்சி செய்கிறேன். இதுவரை பணம் கிடைக்கவில்லை. நிலுவைத்தொகை தந்தால் உதவியாக இருக்கும்" என்கிறார், பரிதாபத்துடன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x