Published : 05 Nov 2020 04:59 PM
Last Updated : 05 Nov 2020 04:59 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கும்பப்பூ சாகுபடிக்கு 4 ஆயிரம் ஹெக்டேரில் இயந்திரம் மூலம் நெல் நாற்று நடவு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ ஆகிய இருபோக நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 6500 ஹெக்டேரிலும் கடந்த கன்னிப்பூ நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு நல்ல மகசூல் கிடைத்தது. நெல்லுக்கான விலையும் அதிகமிருந்து.
அதே நேரம் அறுவடை நேரத்தில் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்ததால் 2 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் நெல் அறுவடை பாதித்து விவசாயிகள் இழப்பை சந்தித்தனர். மீதமுள்ள 4500 ஹெக்டேரிலும் முன்கூட்டி அறுவடை செய்த விவசாயிகள் லாபம் ஈட்டினர்.
கன்னிப்பூ அறுவடை முடிந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கும்பப்பூ நெல் சாகுபடி பணிகள் தொடங்கி நடந்து வருகின்றனர்.
இடையில் மழை நின்று வெயில் அடித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக குமரி மாவட்டத்தில் மழை விட்டுவிட்டு பெய்து வந்தது. இதில் இன்று மதியத்தில் இருந்து குமரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.
மழையை பயன்படுத்தி குமரி மாவட்டத்தில் நாவல்காடு, சுசீந்திரம், இறச்சகுளம், பெரியகுளம் போன்ற வயல் பரப்புகளில் கும்பப்பூ சாகுபடிக்கான நெல் நாற்று நடும் பணி பரவலாக நடந்து வருகிறது.
இதில் மொத்தம் உள்ள வயல் பரப்புகளில 4 ஆயிரம் ஹெக்டேரில் இயந்திரம் மூலம் நெல் நாற்று நடவு செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கும்பப்பூ நடவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாவல்காடு வயல்பரப்பில் வேளாண்துறை சார்பில் நெல் நடவு செய்வதை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் நெல் மகசூலை அதிகரிப்பது குறித்து திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் அவர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் வேளாண்துறை இணை இயக்குனர் சத்தியஜோஸ், உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் அவ்வை மீனாட்சி, முன்னோடி விவசாயி செண்பகசேகர பிள்ளை, பூதப்பாண்டி வேளாண்மை உதவி இயக்குனர் ஜோஸ், மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT