Published : 05 Nov 2020 04:08 PM
Last Updated : 05 Nov 2020 04:08 PM
ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பட்டாசு விற்பனை மற்றும் அதனை வெடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி இன்று (நவ. 5) ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்கு எழுதிய கடிதம்:
"கலாச்சார நெறிமுறைகளின் ஒரு பகுதியாக, பட்டாசுகளை வெடித்து, தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை தாங்கள் அறிவீர்கள்.
23.10.2018 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பட்டாசு தயாரிப்பில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் உள்ள வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டும், தீபாவளி கொண்டாடும் கலாச்சார நெறிமுறையைக் காக்கவும், தீபாவளிப் பண்டிகையன்று பொது இடங்களில் குறிப்பிட்ட 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் பசுமைப் பட்டாசுகளை காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் வெடிக்க, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
குறைவான உமிழ்வு மற்றும் குறைந்த டெசிபல் திறன் கொண்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பட்டாசுகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலம் தமிழ்நாடு. நாட்டில் 90% பட்டாசுகள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன்மூலம், நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 4 லட்சம் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
தீபாவளிப் பண்டிகை காலத்தில் விற்பனையாகும் பட்டாசுகளைப் பொறுத்தே அவர்களின் வாழ்வாதாரம் அமைகிறது. பட்டாசுகளுக்கு உங்கள் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள தடை, தமிழகத்தில் 8 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் அதன் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மோசமாக்கிவிடும்.
கோவிட் -19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு பட்டாசுகள் விற்பனை மற்றும் அதனை வெடிப்பதற்குத் தடை விதித்துள்ளதைப் புரிந்துகொள்கிறேன். தமிழ்நாடு பெருமளவில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்கின்றன. அதனால் சூழல் மாசுபாடு குறித்து கேள்வி எழத் தேவையில்லை. பட்டாசு வெடிப்பது கோவிட் - 19 நோயாளிகளைத் தாக்கும் என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை.
எனவே, பட்டாசு விற்பனை மற்றும் அதனை வெடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துகள்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT