Published : 05 Nov 2020 03:16 PM
Last Updated : 05 Nov 2020 03:16 PM

வேதா இல்லத்தை அரசுடைமையாக்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: உயர் நீதிமன்றம் முடித்து வைப்பு

சென்னை

போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை அரசுடைமையாக்கச் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என தமிழக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கை முடித்து வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை அரசுடமையாக்கிப் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், ஜெயலலிதா இறந்தபின், தங்களை வாரிசுகளாக அறிவிக்கக் கோரி தானும், தன் சகோதரி தீபாவும் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், வேதா நிலையத்தையும், அங்குள்ள அசையும் சொத்துகளையும் அரசுடமையாக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனிநபர் சொத்துகளைக் கையகப்படுத்துவது தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை எனவும், ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் குறித்த உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளாமல் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

வேதா நிலையத்தை அரசுடமையாக்கிப் பிறப்பித்த அவசரச் சட்டத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், நினைவில்லமாக மாற்றத் தடைவிதிக்க வேண்டும் எனவும் மனுவில் தீபக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ''அவசரச் சட்டத்துக்கு மாற்றாகச் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அது அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது. அதனால் இந்த வழக்குச் செல்லத்தக்கதல்ல என்பதால், சட்டத்தை எதிர்த்து மனுதாரர் வழக்குத் தொடரலாம்'' என்றார்.

இதையடுத்து, சட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடர தீபக் தரப்புக்கு அனுமதியளித்த தலைமை நீதிபதி அமர்வு, அவசரச் சட்டத்தை எதிர்த்த வழக்கை முடித்து வைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x