Published : 05 Nov 2020 12:45 PM
Last Updated : 05 Nov 2020 12:45 PM
கோவை அருகே புதர்மூடி மண்மேடாகக் கிடந்த கீரணத்தம் மழை நீர் ஓடை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தூர்வாரி சீரமைக்கப்பட்டு வருகிறது.
கோவையை அடுத்த சரவணம்பட்டி அருகே கீரணத்தம் தொழில்நுட்பப் பூங்கா அருகில் மழை நீர் ஓடை உள்ளது. இதில் கொட்டப்படும் குப்பை, பிற கழிவுகள், புதர்கள் மற்றும் களைச்செடிகள் மண்டிக் கிடந்ததால், நீரோட்டம் தடைப்பட்டு, மழையின்போது அடித்து வரப்படும் மண் நிரம்பி, ஓடை மூடிய நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில் கீரணத்தம் நீர்நிலைகள் பாதுகாப்பு அமைப்பினர், தனியார் சமூகப் பங்களிப்புத் திட்டத்தின் கீழ், ராக் அமைப்பு மற்றும் ராபர்ட் பாஷ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, இந்த ஓடையைத் தூர்வாரி சீரமைத்து வருகின்றனர்.
இதுகுறித்து கீரணத்தம் நீர்நிலைகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த எஸ்.சிவராஜா கூறியதாவது:
''இப்பகுதியில் உள்ள சாம்பிராணி குட்டையில் இருந்து வழிந்தோடி வரும் மழை நீரானது, தொழில்நுட்பப் பூங்காவின் கீழ்ப்பகுதியில் குறுக்கே கடந்து, நல்லுசாமி தடுப்பணை, கீரணத்தம், கௌசிகா நதியை நோக்கிச் செல்கிறது. குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் உள்ள குளம், குட்டை, ஓடைகள் தூர்வாரப்படுவது வழக்கம். ஆனால் இந்த மழை நீர் ஓடையைத் தூர்வாரி சுமார் 5 ஆண்டுகள் இருக்கும்.
எனவே மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய அனுமதி பெற்று, இரு அமைப்புகளுடன் இணைந்து இந்த ஓடையைத் தூர்வாரி வருகிறோம். குப்பை கொட்டுவதைத் தடுக்கும் வகையில், ஓடையைச் சுற்றிலும் கம்பி வேலிகள் அமைக்கப்பட உள்ளன.
கோவை வடக்குப் பகுதி ஏற்கெனவே வறட்சிமிக்க பகுதியாகும். இந்நிலையில் நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த ஓடையைச் சீரமைப்பதன் மூலம், மழை நீர் தடையின்றிச் செல்வதால், நிலத்தடி நீர் பெருகும். சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்குக் குடிநீர் கிடைக்கும். அத்துடன் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்''.
இவ்வாறு சிவராஜா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT