Published : 05 Nov 2020 10:34 AM
Last Updated : 05 Nov 2020 10:34 AM
விளைநிலங்களில் எண்ணெய்க் குழாய் பதிப்பதைக் கைவிட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (நவ. 5) வெளியிட்ட அறிக்கை:
"பாரத் பெட்ரோலியம் நிறுவனம், கோவை இருகூரில் இருந்து பெங்களூரு தேவனகொந்தி வரை எண்ணெய்க்குழாய் பதிக்கும் திட்டத்தைச் (IDPL) செயல்படுத்தி வருகின்றது. இதனால், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் வேளாண் விளைநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்; பல்லாயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும். எனவே, இது குறித்து விவசாயிகள் தமிழக முதல்வரிடம் நேரில் முறையிட்டனர்.
தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, தொழில்துறை அமைச்சரைச் சந்தித்து, விவசாயிகள் விரிவாகப் பேசினர். 'இது மத்திய அரசு திட்டம்; நாங்கள் எதுவும் செய்ய இயலாது' என தொழில்துறை அமைச்சர், 2020 பிப்ரவரி மாதம் தெரிவித்தார்.
அதன்பிறகு, பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் பொறுப்பாளர்கள் டெல்லிக்கு வந்தனர். அவர்களை, பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் நான் அழைத்துச் சென்றேன். அவரிடம் முறையிட்டனர். அதன்பிறகு, பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினார்கள். அனைத்து இந்திய விவசாய சங்கங்கள் ஆதரவு அளித்தனர்.
இந்நிலையில், தற்போது, தருமபுரி மாவட்டத்தில் நல்லாம்பள்ளி, பாலக்கோடு ஆகிய இரு தாலுக்காக்களில், இந்தத் திட்டத்திற்கான நிலங்களை, மத்திய அரசே கையகப்படுத்தி, பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசிதழில் ஆணை பிறப்பித்துள்ளது. விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்திய அரசு நிலம் கையகப்படுத்தி இருப்பது, கடும் கண்டனத்திற்குரியதாகும். இந்த நடவடிக்கையால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொங்கு மண்டல விவசாயிகளுக்கு எதிரான பாஜக மோடி அரசின் நடவடிக்கைக்கு, தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசு முழு ஒத்துழைப்புக் கொடுத்து வருகின்றது.
விளைநிலங்களில் எண்ணெய்க் குழாய் பதிப்பதைக் கைவிட்டு, வீண் பிடிவாதம் செய்யாமல், மாற்று வழிகளில் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்ற கருத்தை, இரண்டு அரசுகளும் ஆய்வு செய்ய வேண்டும்; விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்".
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT