Published : 05 Nov 2020 03:12 AM
Last Updated : 05 Nov 2020 03:12 AM
தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள ரூ.324 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழனிசாமிஅடிக்கல் நாட்டினார். முடிக்கப்பட்ட ரூ.294.15 கோடியிலான பணிகளையும் தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.162.43 கோடியில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, தேனி ஊராட்சி ஒன்றியங்களில் அமைய உள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.9.90 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம், கீழமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.8.46 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம், திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் பேரூராட்சியில் ரூ.9.62 கோடியில் குடிநீர் மேம்பாட்டு திட்டம், நாகை மாவட்டத்தில் ரூ.42.46 கோடியில் கூடுதல் நீர் ஆதாரம் ஏற்படுத்துவதற்கான திட்டம், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.91.13 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் என மொத்தம் ரூ.324 கோடி குடிநீர் திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.46.32 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம், தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் ரூ.6.60 கோடியில் கட்டப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திட்ட அலுவலக கட்டிடம், மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் ரூ.2 கோடியிலான நகராட்சி அலுவலக கட்டிடம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் ரூ.3 கோடியிலான தூய்மை பணியாளர் குடியிருப்பு, ஆவடி மாநகராட்சியில் ரூ.197.20 கோடியிலான 4 எம்எல்டி சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் ரூ.255.12 கோடியிலான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையின் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் ரூ.21.82 கோடியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புடன் சீரமைக்கப்பட்ட 31 நீர்நிலைகள், சென்னை மாநகராட்சியால் சீரமைக்கப்பட்ட 117 சமுதாய கிணறுகள், சென்னை பெருநகர் குடிநீர் வடிகால், கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் சீரமைக்கப்பட்ட 174 சமுதாய கிணறுகள் என மொத்தம் 291 சமுதாய கிணறுகள், திரு.வி.க. நகர் ஸ்டிரஹான்ஸ் சாலையில் ரூ.13.49 கோடியிலான புதிய மண்டல அலுவலக கட்டிடம், துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் ரூ.1.95 கோடியிலான நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையக் கட்டிடம், தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் ரூ.69 லட்சத்திலான சிறப்பு காப்பக கட்டிடம், வில்லிவாக்கம் சிட்கோநகர் 4-வது பிரதான சாலை குடியிருப்பு பகுதியில் ரூ.1.08 கோடியிலான பூங்கா என மொத்தம்ரூ.39.03 கோடி மதிப்பிலான சென்னை மாநகராட்சி திட்டங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.27 லட்சத்தில் 3 நடமாடும் அம்மா உணவகங்கள், குப்பைகளை உறிஞ்சி அகற்றுவதற்கு ரூ.4.34 கோடியிலான 15 சிறிய வகை வாகனங்களை பயன்பாட்டுக்கு முதல்வர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ் வளர்ச்சிதுறை அமைச்சர் கே.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT