Published : 23 Oct 2015 02:55 PM
Last Updated : 23 Oct 2015 02:55 PM
உலகளவில் 260 சைஜீசியம் டிராவன் கோரிகம் வகை காட்டு நாவல் மரங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
இயற்கையைப் பாதுகாக்கும் மரபானது பண்டைய காலம் தொட்டு முன்னோர்களிடம் இருந்துள் ளது. அவர்கள் வனப்பகுதியைச் சுற்றிலும் கோயில்கள், மடங்கள், சன்னதிகள் மற்றும் இடுகாடுகளை அமைத்து பாதுகாத்து வந்துள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரையில் குறிப்பாக அய்யனார், அம்மன் மற்றும் கருப்பசாமி தெய்வங்களை மையமாகக் கொண்டு கடந்த காலங் களில் வனப்பகுதிகளை முன் னோர்கள் இயற்கையாகவே அவர்களை அறியாமல் பாதுகாத்து வந்துள்ளனர்.
இந்தியாவை பொருத்தமட்டில் வனப்பகுதியில் 14,000-க்கும் மேற் பட்ட இவ்வகை ‘கோயில் காடுகள்’ பரவிக் காணப்படுகின்றன. நாட் டிலேயே அதிகப்படியாக இமாச் சலப் பிரதேசத்தில் 5,000-க்கும் மேற்பட்ட கோயில் காடுகளும், அதற்கு அடுத்தப்படியாக கேரளத் தில் 2,000-க்கும் மேற்பட்ட கோயில் காடுகளும், தமிழகத் தில் 550 கோயில் காடுகளும், காணப் படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளன. கடவுளின் பெயரால் பாதுகாக்கப் பட்ட இந்த வனப்பகுதிகளில் வேட்டை கும்பல், மரம் வெட்டும் கும்பல் நுழைய அச்சமடைந்ததால் ஆரம்பகாலத்தில் வேட்டையாடு தல், மரம் வெட்டுதல் போன்றவை தடுக்கப்பட்டன. அதனால், இந்த காடுகள் இன்றளவும் மருத்துவத் தாவரங்களின் களஞ்சியமாகவும், பழமரங்கள், தேன் மற்றும் அங்கு வாழும் வன உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும் உள்ளன.
இந்நிலையில் நாகரிக வளர்ச்சி யால் முன்னோர் வழிபட்ட இக் கோயில் காடுகள் அழிந்து வரு கின்றன. அவற்றால் பாதுகாக் கப்பட்ட வனப்பகுதிகளும், அந்த வனப்பகுதிகளில் காணப்பட்ட 100-க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்களும் அழியும்தருவாயில் உள்ளதாக காந்தி கிராம பல்கலைக்கழக உயிரியல் துறை ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அந்த 100-க்கும் மேற்பட்ட அழியும் மரங்களில் சைஜீசியம் டிராவன்கோரிகம் வகை காட்டு நாவல் மரங்கள் வேகமாக அழியக் கூடியதருவாயில் உள்ளதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த மரங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக உயிரியல் துறைப் பேராசிரியர் இரா.ராமசுப்பு மற்றும் அவரது ஆராய்ச்சி மாணவர் மோகன்ராஜ் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
‘‘பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பின் 2014-ம் ஆண்டு அறிக்கையின்படி அழியக்கூடிய தருவாயில் இருந்த இம்மரங்கள், 2015-ம் ஆண்டு மிக மோசமாக அழியும் தருவாயில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரங்கள் உலகளவில் மேற்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக வனப்பகுதிகளில் மட்டுமே உள்ளன. 1894-ம் ஆண்டு உலகுக்கு இந்த மரம் அறிமுகப் படுத்தப்பட்டது. இன்றைய சூழலில் மொத்தம் 260 மரங்களே எஞ்சியிருப் பதாக பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் பட்டைகள், பழங்கள் மற்றும் இலைகள் நீரழிவு நோயை தடுக்கும் வல்லமை கொண்டதால் இயற்கை மருத்துவத்தில் கடந்த காலத்தில் அதிகப்படியாக உப யோகிக்கப்பட்டுள்ளன. இவற்றின் பழங்கள் மற்றும் இலைகள் வன உயிரினங்களின் முக்கிய உணவாக விளங்குகின்றன.
இம்மரங்களுக்கு தேக்கைப்போன்ற மதிப்புள்ளதால் மர வியாபாரிகளிடம் நல்ல வர வேற்பு உள்ளது. அதனால் பெரும் பாலான மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. எல்லா ஆண்டுகளிலும் இம்மரங்கள் தொடர்ச்சியாக பூப் பதில்லை. இந்த மரத்தின் விதைக்கு முளைக்கும் திறன் அதிகம் என் றாலும், இந்த மரக்கன்றுகள் காடுகளில் வளரும் முன்பே அழிகின்றன. இந்த மரங்களை பாதுகாக்க தேவையான திட்டங்கள் மற்றும் ஆலோசனைகளை பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பிடம் தெரிவிப்போம்.’’
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT