Published : 05 Nov 2020 03:12 AM
Last Updated : 05 Nov 2020 03:12 AM

டெல்டா மாவட்டங்களில் கருகும் நெற்பயிர்கள்- மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் நீர் திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கக் கோரி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த நாகத்தி கோணகடுங்கலாறு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தஞ்சாவூர்

டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூரில் இருந்து கடந்த ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. குறுவை சாகுபடி பணிகள் சிறப்பாக முடிந்த நிலையில், சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால், பயிர்களைக் காப்பாற்ற வாய்க்கால்களில் கூடுதல் நீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கருகும் நெற்பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர்அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி திருவையாறு அருகே நாகத்தியில் கோணகடுங்கலாறு பகுதியிலும், அம்மாபேட்டை அருகே புத்தூர் பகுதியிலும் விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தஞ்சாவூர் மாவட்ட துணைச் செயலாளர் பி.சுகுமாறன் கூறியதாவது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, அம்மாபேட்டை, பழியஞ்சியநல்லூர், கொத்துக்கோவில், திருவிடைமருதூர் பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கரிலும், நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் 12 ஆயிரம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர், மாங்குடி, தென்னவராயநல்லூர், பூதமங்கலச்சேரி பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கரிலும் நாற்று நட்டு 30 நாட்களே ஆன சம்பா நெற்பயிர்கள் கருகி வருகின்றன.

மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தால் மட்டுமே கருகும் சம்பா, தாளடி நெற்பயிர்களை காப்பாற்ற முடியும். இதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x