Published : 05 Nov 2020 03:12 AM
Last Updated : 05 Nov 2020 03:12 AM

தொழில்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டத்தில் கோரிக்கை

திருப்பூர்

திருப்பூரில் தொழில் துறை வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என திருப்பூரில் நேற்று நடைபெற்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்துக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனைக் கூட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு,துணைபொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர்செல்வராஜ் எம்.பி., கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. கலந்து கொண்டனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளை சேர்ந்த கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகள், மாணவ, மாணவிகள், வணிகர்கள், தொழில்துறையினர், பொதுமக்களிடமிருந்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். மாவட்ட பொறுப்பாளர்கள் க.செல்வராஜ், மு.பெ.சாமிநாதன்,இல.பத்மநாபன், ஜெயராமகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

முக்கிய கோரிக்கைகளை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், வாய்மொழியாக கேட்டறிந்துகுறிப்பெடுத்துக் கொண்டனர். அப்போது கட்சி நிர்வாகிகள் பேசும்போது, ‘‘அருந்ததியர் தலைவர்களுக்கு மணிமண்டபங்கள் அமைக்க வேண்டும். விசைத்தறி உற்பத்தி வளர்ச்சிக்கு தேவையான தனி சந்தை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கை, மக்களை எளிதில் கவரும் வகையில் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் வண்ண தொலைக்காட்சி வழங்கியதுபோல, தற்போது எல்இடி தொலைக்காட்சி வழங்க வேண்டும்’’ என்றனர்.

மாநகர் மாவட்ட பொறுப்பாளர் க.செல்வராஜ் அளித்த கோரிக்கை மனுவில், ‘‘திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை, அவசர சிகிச்சை மேம்பாடு, வடக்கு பகுதியில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். திருப்பூர் தொழில் துறை வளர்ச்சிக்கு தேவையாக உள்ள சாலை திட்டங்கள், மேம்பால வசதிகள் உட்பட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கல்வி,தொழிலாளர் நலன், தொழில் வளர்ச்சி, இளைஞர் நலன், பெண்கள் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதோடு, அதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை சேர்க்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடி யாக உள்ள பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்தின் கீழ் ஏற்கெனவே கேரள மாநிலத்தோடு மேற்கொண்ட ஒப்பந்தப்படி இன்னும் சில அணைகள் கட்டப்படவேண்டியுள்ளன. அவற்றில் முக்கியமானது தமிழகத்தில் உற்பத்தியாகும் மேல்நீராறு ஆற்றின் தண்ணீரை நேரடியாக குழாய் அமைத்து திருமூர்த்தி அணைக்கு கொண்டு வரும் திட்டமாகும். இதனால் 3 மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். கேரள அரசு இத்திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, கடந்த 40 ஆண்டு காலமாக இடைமலையாறு திட்டத்தை முடிக்காமல் காலதாமதம் செய்கிறது.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பாசன ஆயக்கட்டு பகுதிகள் வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறியுள்ளதால், அந்த ஆயக்கட்டு பகுதிகளை நீக்கிவிட்டு, ஏற்கெனவே உள்ள ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஆண்டுதோறும் சுழற்சி முறையில் தண்ணீர் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x