Published : 31 May 2014 03:07 PM
Last Updated : 31 May 2014 03:07 PM
இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு தளவாட உற்பத்திதுறையில் 100% அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் 29, 30 தேதிகளில் சென்னை சிந்தாதிரி பேட்டையிலுள்ள ஏ.ஐ.டி.யு.சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, மாநில துணைச் செயலாளர்கள் சி.மகேந்திரன், கோ.பழனிச்சாமி, செயற்குழு உறுப்பினர்கள் எம்.அப்பாத்துரை, பி.சேதுராமன், மு.வீரபாண்டியன், பி.பத்மாவதி, டி.எம்.மூர்த்தி, ஆர்.முத்தரசன், ஆகியோர் கலந்து கொண்டனார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: "இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு தளவாட உற்பத்திதுறையில் 100% அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவுகளை வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி தருகிறது. விடுதலைக்கு பின் அமைந்த ராணுவத்தின் தேவைகள் அனைத்தும் பாதுகாப்பு கருதி ராணுவத்தின் கண்காணிப்பிலேயே நிறைவு செய்யப்பட்டது. தனியாருக்கு எந்த அனுமதியும் வழங்கபடவில்லை.
இந்த பின்புலத்திலிருந்து, இன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க அரசு, ராணுவத்தில் நூறு சதவீத அந்நிய முதலீட்டை ஊக்குவிப்போம் என்பது பெரும் அதிர்ச்சியை தருவதாக அமைந்துள்ளது. அந்நிய முதலீட்டில் ராணுவம் இயங்குமானால் ரகசியங்கள் எவ்வாறு காப்பாற்றப்படும் என்ற அடிப்படையான கேள்வி எழுகிறது.
இந்திய பாதுகாப்பு கடும் நெருக்கடிக்குள் சிக்கி விடும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். உடனடியாக தேச நலன் கருதி இந்த முடிவை மாற்ற வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் குறைபாடுகளை முன்நிறுத்தி தேர்தலில் வெற்றிப் பெற்ற பா.ஜ.க இதே கொள்கையை, ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே செய்யத்தொடங்கிவிட்டது.
பெட்ரோல், டீசல், கேஸ், விலை முந்தைய அரசின் கொள்கைபடியே, சந்தை நிலவரத்திற்கேற்ப முதலாளிகளே உயர்த்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதனால் மாதா மாதம் விலை ஏறும் அபாயம் மீண்டும் எழுந்துள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பா.ஜ.க அரசின் இந்த கொள்கையை வன்மையாக் கண்டிக்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT