Published : 04 Nov 2020 06:29 PM
Last Updated : 04 Nov 2020 06:29 PM
வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பைக் கைவிட வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (நவ. 4) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாட்டில் தீப ஒளித் திருநாளுக்குப் பிறகு நவம்பர் 16-ம் தேதி முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா அச்சம் முழுமையாக விலகாத சூழலில், பள்ளி, கல்லூரிகளைத் திறக்கும் தமிழக அரசின் முடிவு சரியானதாகத் தோன்றவில்லை.
கரோனா வைரஸ் பாதிப்பு மாணவர்களையும், ஆசிரியர்களையும் மட்டும் பாதிக்கக்கூடியது அல்ல. அவர்கள் மூலமாக வீட்டில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள், முதியோர் குழந்தைகளையும் தாக்கி மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இவ்விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. அனைத்துப் பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பத் தயங்கும் நிலையில், தனியார் பள்ளிகள் அழுத்தம் கொடுத்து அதனால் இம்முடிவை அரசு எடுத்ததாக இருக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் தினசரி கரோனா வைரஸ் பரவல் 3,000-க்கும் கீழாக வந்துவிட்டது; கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருவோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துவிட்டது என்பன உள்ளிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவெடுப்பதற்கு இந்தப் புள்ளிவிவரங்கள் பொருத்தமான அளவீடு இல்லை என்பதே பாமகவின் கருத்து ஆகும்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனம் முதல் உள்ளூர் மருத்துவ வல்லுநர்கள் வரை பரிந்துரைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எனப்படுபவை முகக்கவசம் அணிதல், கையுறைகளை அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவைதான். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இவை சாத்தியமில்லை என்பதுதான் யதார்த்தம் ஆகும்.
9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புப் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும்தான் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. மாணவர் பருவம் என்பது உற்சாகமாகவும், குதூகலமாகவும் விளையாடி மகிழும் பருவம் ஆகும். அனைத்து மாணவர்களும் கிட்டத்தட்ட 7 மாதங்களுக்குப் பிறகு, நடப்புக் கல்வியாண்டில் இப்போதுதான் வகுப்புகளில் முதன்முறையாகச் சந்திக்கவுள்ளனர். இந்தத் தருணத்தில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்களைக் கட்டாயப்படுத்துவது என்பது காட்டாற்று வெள்ளத்துக்கு மணலால் அணை கட்டுவதற்கு ஒப்பான செயலாகும். இது சாத்தியமற்ற, பயனளிக்காத ஒன்றாகும்.
முகக்கவசம் அணிவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரை மிகவும் சிரமமான செயலாகும். அதிகபட்சமாக அரை மணி நேரம் முகக்கவசம் அணிந்தாலே பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்.
ஆனால், வகுப்புகளில் அவ்வப்போது சில நிமிட இடைவெளிகளுடன் 6 முதல் 7 மணி நேரம் வரை முகக்கவசம் அணிவது மிக மிகக் கடினம் ஆகும். ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படுவதாலோ, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாலோ ஒரு சில நிமிடங்களுக்கு முகக்கவசத்தைக் கழற்றினால் கூட, அதன் மூலம் கரோனா வைரஸ் தொற்றிக்கொள்ள வாய்ப்புகள் உண்டு.
அதேபோல், கையுறைகளை அணிந்துகொண்டு பாடக்குறிப்புகளை எழுதுவதிலும் சிக்கல்கள் உள்ளன. கையுறைகளை அணியாமல் பள்ளியில் உள்ள பல பொருட்களைத் தொடும்போது, அச்செயல்கள் மாணவர்களுக்குக் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கக்கூடும். மொத்தத்தில் இந்த நேரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறப்பது என்பது நெருப்புடன் விளையாடுவதற்கு ஒப்பானதாகும். இது ஆபத்தானது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் விடுதிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அங்குள்ள மாணவர்கள் 24 மணி நேரமும் முகக்கவசம் அணிவது சாத்தியமல்ல. அவர்களில் ஒருவருக்குக் கரோனா தொற்று இருந்தால் கூட விடுதியில் உள்ள அனைவரும், அவர்கள் மூலமாக கல்வி நிறுவனங்களில் உள்ள பெரும்பான்மையினருக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பொதுக் கழிப்பறையைத்தான் மாணவ, மாணவியர் பயன்படுத்த வேண்டியிருக்கும். அவைதான் கரோனா தொற்று மையமாகத் திகழும். இத்தகைய ஆபத்தான விளையாட்டில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது.
மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் கரோனா ஆபத்து அதிகமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஆசிரியர்களில் கணிசமானவர்கள் 50 வயதைக் கடந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம் என்பதால் பள்ளிகளைத் திறந்து ஆபத்தை விலைக்கு வாங்கக் கூடாது.
இந்த எச்சரிக்கைகளை எல்லாம் அச்சுறுத்துவதற்காகக் கூறவில்லை. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளின் அனுபவங்களில் இருந்தும், அந்த நாடுகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, கரோனா பாதிப்பு அதிகரித்ததால் மீண்டும் மூடப்பட்ட வரலாற்றை அறிந்ததாலும்தான் கூறுகிறேன். இந்த ஆபத்துகளை அரசு உணர வேண்டும்.
பள்ளிகளைத் திறந்து வகுப்புகளை நடத்த வேண்டும் என்பது கல்வி சார்ந்த அக்கறையாக இருக்கலாம். ஆனால், அவற்றை விட மாணவர்களின் உயிர் முக்கியமாகும். தமிழ்நாட்டில் கரோனா அச்சம் முழுமையாகத் தணியவில்லை. கரோனா வைரஸ் முழுமையாக அகற்றப்பட்டால் மட்டுமே கற்றல் சாத்தியமாகும்.
டெல்லி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு முதலில் குறைந்தாலும், பின்னர் பெருமளவில் அதிகரித்துவிட்டது. உலக அளவில் கரோனா இரண்டாவது அலை தொடங்கிவிட்டது; பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆந்திராவில் வகுப்புகள் தொடங்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அச்சத்தை அதிகரிக்கின்றன.
இத்தகைய சூழலில் பள்ளி - கல்லூரிகளைத் திறந்து தமிழகத்திலும் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி விடக் கூடாது. கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை அல்லது கரோனா முழுமையாக கட்டுக்குள் வரும் வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பை தமிழக அரசு கைவிட வேண்டும்; அதுவரை ஆன்லைன் வகுப்புகளைத் தொடர வேண்டும். வல்லுநர்கள் குழு பரிந்துரைக்கும், கள எதார்த்தத்திற்கும் ஏற்ற வகையில் பாடங்களின் அளவைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT