Published : 04 Nov 2020 06:21 PM
Last Updated : 04 Nov 2020 06:21 PM

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி; 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

''இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, கோவை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் , திருவாரூர், கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 72 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

மேட்டுப்பாளையம் (கோவை) 7 செ.மீ., திருச்சுழி (விருதுநகர்), திருப்பூர், குன்னூர் (நீலகிரி) தலா 5 செ.மீ., ராஜபாளையம் (விருதுநகர்) 4 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), கெட்டி (நீலகிரி ), ஆனந்தபுரம் (விழுப்புரம்) தலா 3 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x