Published : 04 Nov 2020 05:00 PM
Last Updated : 04 Nov 2020 05:00 PM
மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிடில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேரிட்டதுபோல் தமிழ்நாட்டிலும் மின் விநியோகம் துண்டிப்பு உள்ளிட்ட தீவிரப் போராட்டத்தை நடத்தவிருக்கிறோம் என்று மின்வாரிய அனைத்துத் தொழிற்சங்க கூட்டுக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகங்கள் முன் மின்வாரிய அனைத்துத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று (நவ. 4) வேலைக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்படி, திருச்சியில் மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு தொமுச மாநிலத் துணைத் தலைவர் பி.மலையாண்டி தலைமை வகித்தார்.
சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கராஜன், பொறியாளர் கழக மண்டலச் செயலாளர் ஜி.விக்ரமன் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட சுமார் 1,000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில், "மின்வாரியத் தலைவர் தொழிலாளர் விரோதப் போக்குடன் நடந்து கொள்வதற்குக் கண்டனம். மின் வட்டங்களில் பணியாற்றும் பொறியாளர், அலுவலர்கள் ஆகியோரின் பதவிகளை ஒழிக்கக் கூடாது. துணை மின் நிலையங்களில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் நியமித்துப் பராமரிப்பைத் தனியாரிடம் விடக்கூடாது.
அரசாணை எண்: 304-ஐ மின் வாரியத்தில் அமல்படுத்த வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். மின் வாரியத்தில் காலியாக உள்ள 42 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும். மின் உற்பத்தியை வாரியமே மேற்கொள்ள வேண்டும். மின்வாரியத் தொழிற்சங்கங்களை அழைத்து மின்வாரியத் தலைவர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டம் குறித்து எஸ்.ரங்கராஜன் கூறும்போது, "எங்களது கோரிக்கைகள் தொடர்பாக மாநில மின்துறை அமைச்சரிடம் 3 முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, கடைநிலை ஊழியர்கள் முதல் உதவிச் செயற்பொறியாளர்கள் வரை திருச்சி மாவட்டத்தில் 1,500 பேர் உட்பட மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் பேர் இன்று வேலைக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு, பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணாவிட்டால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அண்மையில் நடத்தியதுபோல் எதிர்காலத்தில் அனைத்துச் சங்கங்களும் ஒன்றிணைந்து தமிழ்நாட்டிலும் மின் விநியோகத் துண்டிப்பு உள்ளிட்ட தீவிரப் போராட்டத்தை நடத்தவிருக்கிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT