Published : 04 Nov 2020 04:09 PM
Last Updated : 04 Nov 2020 04:09 PM
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் கேபழனிச்சாமி பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் வரும் 11-ம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகவும், அப்போது பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் அறிவிப்பார் எனவும் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அம்மா இருச்சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் 2019- 2019-ம் ஆண்டு 64-வது தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு, 5 மாற்றுத்திறனாளிகளுக்கு அம்மா இருச்சக்கர வாகனங்களையும், 11 மாணவ, மாணவியருக்கு ரூ.17 லட்சம் ஊக்கத் தொகையையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அனைத்து திரையரங்குகளுக்கும் சுற்றிக்கையாக அனுப்பப்படும்.
அந்த நெறிமுறைகளை அனைத்து திரையரங்குகளும் முழுமையாக பின்பற்ற வேண்டும். திரையரங்க உரிமையாளர்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்குவது குறித்து வரும் காலங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப முதல்வர் முடிவு செய்வார்.
கரோனா தடுப்பு பணிக்காக தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் தான் பணி அமர்த்தப்பட்டனர்.
அவர்களது விருப்பத்தின் பேரிலேயே பணியில் சேர்ந்தனர். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அடுத்து அரசு பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் போது கரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு நிச்சயமாக அரசு முன்னுரிமை அளிக்கும்.
தமிழகத்தில் கரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த அலை ஏதும் வருவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை அரசு உறுதிபடுத்தியுள்ளது. இருப்பினும் தொடர்ந்து கரோனா தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வர் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் வரும் 11-ம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே தயாராக உள்ளன.
கரோனா தடுப்பு பணிகளோடு, மாவட்டத்தின் வளர்ச்சி திட்டப்பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்கிறார். மேலும், மாவட்டத்துக்கான புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுகிறார். தூத்துக்குடி மாவட்ட மக்கள் திருப்திபடும் வகையிலான அறிவிப்புகள் இருக்கும்.
புதிதாக தொடங்கப்படும் பள்ளிகளுக்கு கட்டிட அனுமதி பெற உள்ளூர் திட்டக் குழுவில் விண்ணப்பித்திருந்தாலே போதும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளார்.
அதன்படி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் புதிய பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி வரும் 7-ம் தேதி திருநெல்வேலியில் நடைபெறவுள்ளது. அதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கலந்து கொண்டு அங்கீகார ஆணைகளை வழங்குகிறார். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 83 பள்ளிகள் தொடங்க அங்கீகார ஆணை வழங்கப்படவுள்ளது என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் தியோர் தாஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT