Published : 04 Nov 2020 01:38 PM
Last Updated : 04 Nov 2020 01:38 PM
தன்னை எதிர்த்து தாழ்ந்த முறையில் சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகப் பொதுமக்கள் ஓட ஓட விரட்டியடிக்கப் போகிறார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 4) வெளியிட்ட அறிக்கை:
"வெட்கித் தலைகுனிந்து, பெயரோ முகவரியோ வெளியிடத் தெம்பும் திராணியுமற்ற சில திரைமறைவு தில்லுமுல்லுப் பேர்வழிகளால் தமிழ்நாட்டின் தெருக்களில் சில சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. சட்ட நெறிமுறைகளின்படி, அந்தச் சுவரொட்டிகளில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டிய அச்சக முகவரியும் இல்லை.
ஊழல் கொள்ளைகளில் ஈடுபடுவோர், கொடுப்பவர் - வாங்கிக் கொள்பவர் பெயர்களைப் புதைத்து வைத்திருப்பார்கள் அல்லவா; அதைப்போல! எடப்பாடி பழனிசாமியைப் புகழும் வாசகங்கள் ஒரு பக்கமும், எதிர்க்கட்சித் தலைவரான என்னை இகழ்ந்து இன்னொரு பக்கமும் கொண்ட வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
என்னை விமர்சிப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், ஜனநாயகத்தில் விமர்சனம் ஆரோக்கியமானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் இருக்க வேண்டும். என்னை விமர்சிப்பவர்கள், விமர்சனம் செய்வதற்குரிய தகுதி உள்ளவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் நான். தகுதி இல்லாத சில நபர்களால், போகிற போக்கில், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்னும் நோக்கில், இத்தகைய சுவரொட்டிகள் ஒட்டப்படுவது, அவற்றில் இடம் பெற்றுள்ள வாசகங்களிலிருந்து தெரிகிறது.
இந்த இழிசெயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடையாளமற்ற, முகவரியற்ற இதுபோன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால், அதனால் ஏற்படும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, அதனை உடனடியாகத் தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது; காவல்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் இருக்கிறது.
ஆனால், இதுவரை அத்தகைய சுவரொட்டிகளை ஒட்டுவதைத் தடுக்கவோ, அல்லது அந்த அநாமதேய சுவரொட்டி ஒட்டியவர்களைக் கைது செய்யவோ எந்த மாவட்டக் காவல்துறையும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆட்சியில் இருப்போரின் அனுசரணையோடும், ஆதரவோடும்தான் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன என்பதைப் பொதுமக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். இந்தியக் குற்றவியல் சட்டம், புத்தகங்கள் பதிவுச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை தரத்தக்க குற்றங்கள் இவை.
பல மாவட்டங்களில் இந்தச் சுவரொட்டிகளைத் திமுக தொண்டர்கள் கிழித்து வருகிறார்கள். அச்செயல்களில் அவர்கள் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தரம் தாழ்ந்த சுவரொட்டிகளைக் கண்டு, திமுக தொண்டர்கள் கொள்ளும் ஆத்திரமும் ஆவேசமும் எனக்குப் புரியாமல் இல்லை.
தன்னை அவதூறு செய்து வைக்கப்பட்ட பேனரை, அனைவரும் இரவிலும் நன்றாகப் படித்துச் செல்ல வசதியாக, விளக்கு ஒன்றைப் பொருத்தி வைத்தார் அண்ணா; 'இந்த விளக்கு மட்டும் அண்ணாதுரை உபயம்' என்று எழுதி வைத்தார். அந்த வழியில் வந்தவர்கள் நாம். 'வாழ்க வசவாளர்கள்' என்றே வாழ்த்துவோம். நமது வெற்றி உறுதி என்பதை உணர்ந்துகொண்டு, நம்மை ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இப்போது நாம் கடைப்பிடித்திட வேண்டியது பொறுமை, பொறுமை! 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்பது முதுமொழி. 'அகழ்வாரைத் தாங்கும் நிலம்' என்பது வள்ளுவம். ஆட்சிக்கு முற்றிலும் எதிரான தமிழ் மக்களின் மனநிலையை மாற்ற என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். எதுவும் பயன் தரவில்லை என்பதால், இப்போது சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள். ஒட்டுகிறவர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகப் பொதுமக்கள் ஓட ஓட விரட்டியடிக்கப் போகிறார்கள்.
பவிசுகளையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி, ஊடகங்களில் உள்ள சிலர் மூலம், தங்களுக்குச் சாமரம் வீசும் கட்டுரைகளையும், காட்சிகளையும் உருவாக்கி வரும் ஆளும் கட்சிக் கும்பலின் அடுத்தகட்ட உத்திதான், கண்ணும் கருத்தும் கூசும் இந்தக் கேவலமான சுவரொட்டிகள்.
கரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற, தமிழக மாணவர்களின் கல்வி வாய்ப்பைக் காப்பாற்ற, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற எள் அளவுக்குக் கூட முயற்சிகள் எடுக்காத ஒரு கொள்ளைக் கூட்டம்; விரக்தியின் விளிம்பிலே நிற்பவர்கள் மேற்கொள்ளும் முயற்சி தொடருமானால், தமிழ் மக்கள் மன்றம் வழங்கப் போகும் கடும் ஆயுள் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT