Published : 04 Nov 2020 01:15 PM
Last Updated : 04 Nov 2020 01:15 PM
சேலம் மாவட்டம், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள 35,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட அதிநவீன திரவ பிராணவாயு கலனை முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக இன்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா தொற்றால் பாதிக்கப்படும் மக்களின் அவசரத் தேவைகளைக் கருதி தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அத்தகைய நடவடிக்கைகளில், அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைக்கு முக்கியத் தேவையான ஆக்ஸிஜன் தங்கு தடையின்றி வழங்க ஏதுவாக திரவ ஆக்ஸிஜன் கொள்ளளவை உயர்த்தியதும் ஒன்றாகும்.
கரோனா பாதிப்புக்கு முன்பாக 34 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் இருந்த திரவ ஆக்ஸிஜன் மொத்தக் கொள்ளளவு 355.1 கிலோ லிட்டர் ஆகும். இந்தக் கொள்ளளவை மேலும் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் கூடுதலாக 30 புதிய ஆக்ஸிஜன் கொள்கலன்கள் பல்வேறு அளவுகளில் கொள்முதல் செய்யப்பட்டு 413.5 கிலோ லிட்டர் அளவுக்கு உயர்த்தி, அதன் மூலம் மொத்தக் கொள்ளளவு 834 கிலோ லிட்டர் அளவுக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 70 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் புதிய சேமிப்புக் கலன்கள் மற்றும் ஏற்கெனவே இருந்த குறைந்த சேமிப்புக் கலன்களுக்குப் பதிலாக உயர் கொள்ளளவு சேமிப்புக் கலன்கள் 11 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு வருகிறது.
திரவ ஆக்ஸிஜன் கொள்ளளவை உயர்த்துவதன் ஒரு பகுதியாக, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே இருந்த 6,000 லிட்டர் கொள்ளளவு கலனுக்குப் பதிலாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலேயே மிக உயர்ந்த கொள்ளளவான 35,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட அதிநவீன திரவ பிராணவாயு கலனை 1 கோடியே 14 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவி, நோயாளிகளுக்குத் தங்கு தடையின்றி, ஆக்ஸிஜன் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அதிநவீன திரவ பிராணவாயு கலனை முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக இன்று திறந்து வைத்தார்.
அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் புதிதாகத் தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பி, அரசு மருத்துவ நிலையங்களுக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி மருத்துவச் சேவை வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக, இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் சுகாதாரத் துறைக்கென மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ஜனவரி 2012-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.
இவ்வாரியம் இதுவரை, 16,120 மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள், 24,849 செவிலியர்கள் உட்பட 50,121 மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராப் பணியாளர்களைத் தெரிவு செய்துள்ளது. அந்த வகையில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 95 சிறப்பு மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் இன்று 8 மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் உமாநாத்,மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT