Published : 04 Nov 2020 01:04 PM
Last Updated : 04 Nov 2020 01:04 PM

இந்து சமய அறநிலையத்துறை கோயில்களின் நிலங்களை கோயில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

இந்து சமய அறநிலையத்துறை கோயில்களின் நிலங்களை கோயில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சக்தி முத்தம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலம் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி இல்லாமல் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு 1965 ஆம் ஆண்டு மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிலத்தில் தற்போது மீன்வளத்துறை மூலம் மீன் அங்காடி அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதேபோல, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடம் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு அறநிலையத்துறையின் அனுமதி இல்லாமல், ஆர்டிஓ அலுவலகம் அமைக்கக் கொடுக்கப்பட்டது.

அறநிலையத்துறை இடங்களைக் கோயில் பயன்பாட்டுக்குத் தவிர மற்றவற்றுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி வி.பி.ஆர்.மேனன், ஏ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

இந்த இரு கோயில்கள் உள்ளிட்ட பல கோயில் நிலங்களின் வழக்குகளில் இன்று (நவ. 4) நீதிபதி ஆர்.மகாதேவன் தீர்ப்பளித்தார்.

அந்தத் தீர்ப்பில், வழக்குத் தொடர்புடைய அறநிலையத்துறை கோயில்களின் நிலங்களைக் கோயில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அறநிலையத்துறை கோயில் நிலங்களில் குத்தகைக்கு இருப்பவர்கள், அறநிலையத்துறை நிர்ணயித்த வாடகையைச் செலுத்த வேண்டும். கோயில்களின் நிலங்களைக் கோயில் விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறை கோயில்களின் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றி, அதுகுறித்த அறிக்கையை ஆணையரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்வதற்காக வழக்குகளை 6 மாதத்திற்குப் பிறகு ஒத்திவைத்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x