Published : 04 Nov 2020 12:53 PM
Last Updated : 04 Nov 2020 12:53 PM
பாஜக சார்பில் நடத்தப்பட உள்ள வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்து தற்போது அது இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் எனவும், முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 6 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த இருப்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.
இந்த வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் பாலமுருகன், செந்தில்குமார் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (நவ. 4) வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுக்களில், தொற்றுப் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, விநாயகர் சதுர்த்தி, மொஹரம் உள்ளிட்ட மத நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், மாநிலம் முழுவதும் ஒரு மாத காலம் வேல் யாத்திரை நடத்தும்போது 3,000 முதல் 5,000 பேர் கூட இருப்பதால் தொற்றுப் பரவும் அபாயம் இருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்து பெண்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து பாஜக சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர்கள், அதேபோன்ற சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் மனுவில் அச்சம் தெரிவித்துள்ளனர்.
யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு, மருத்துவர்கள், பல துறை ஊழியர்கள் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் வீணாகும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
யாத்திரை முடியும் நாளான டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் எனவும், அதன் காரணமாகவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மனுதாரர்கள் தரப்பில் முறையிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள் செந்திகுமாரின் மனுவை நாளை (நவ. 5) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT