Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM
ஆன்லைனில் சீட்டு விளையாடுபவர்கள் குறித்து குடும்பத்தினர் தகவல் கொடுத்தால், அந்த நபருக்கு போலீஸார் மூலம் இலவசமாக கவுன்சலிங் வழங்கப்படும் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிதிஷ்குமார(20), புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், விழுப்புரத்தை சேர்ந்த குமரேசன் உட்பட 7 பேர் கடந்த 4 மாதங்களில் ஆன்லைனில் சீட்டு விளையாடி பல லட்சங்களை இழந்து தற்கொலை செய்துள்ளனர். உயிர்பலி வாங்கும் ஆன்லைன் சீட்டாட்டத்தை தடை செய்யக் கோரி பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டம் குறித்து சைபர் கிரைம் அதிகாரியிடம் கேட்டபோது, “சீட்டு விளையாடுவதற்கென்றே ஏராளமான இணையதளங்கள் உள்ளன. அவற்றில் நாம் விளையாடும்போது, நம்முடன் வேறொரு மனிதர் விளையாடுவதாக நாம் நினைப்பது முதல் தவறு. நம்முடன் ஒரு இயந்திரமே விளையாடும். ஏற்கெனவே நேர்த்தியாக புரோகிராம் செய்யப்பட்ட ஒரு கம்ப்யூட்டருடன்தான் நாம் விளையாடுவோம்.
அடுத்து என்ன சீட்டு வரும், நமது கையில் இருக்கும் சீட்டின் விவரம் உட்பட அனைத்தும் அந்த கம்ப்யூட்டருக்கு தெரியும். பின்னர் எப்படி அதை நாம் ஜெயிக்க முடியும். இணையதளத்தில் பணம் கட்டி சீட்டாட்டம் விளையாடுவதை மத்திய அரசு எப்படி அனுமதிக்கிறது என்று புரியவில்லை. எனவே, சீட்டாட்ட இணையதளங்களை தடை செய்யக் கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி இருக்கிறோம்.
ஆன்லைனில் விளையாடுபவர்கள் குறித்து, அவர்களின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால், அந்த நபர்களை அழைத்து, அவர்களுக்கு இலவசமாக கவுன்சலிங் கொடுக்க காவல்துறை தயாராக இருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT