Published : 03 Nov 2020 08:03 PM
Last Updated : 03 Nov 2020 08:03 PM
டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்கள் தணிக்கை செய்யப்படுகிறதா? என்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சமூக நீதி கல்வி பண்பாட்டு மையத்தின் செயலர் பெருமாள், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
திரையுலகில் சிலர் வணிக நோக்கத்தில் ஆபாசங்களை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர். இந்த திரைப்படங்கள் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்க காரணமாக அமைகிறது. இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தில் டீசர் வெளியாகியுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள வசனம் ஆபாசமாகவும், கேட்போர் முகம் சுளிக்கும் வகையிலும் உள்ளது.
அந்தப் படத்துக்கான போஸ்டரும் மிகவும் ஆபாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கில் குழந்தைகள் பலர் படிப்பதற்காக இணையதளங்களை சார்ந்திருக்கும் போது இதுபோன்ற படங்களின் டீசரால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின்கீழ் இது தடை செய்யப்பட வேண்டும். எனவே இரண்டாம் குத்து படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்களை சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து நீக்கவும், படத்தை வெளியிட நிரந்தத் தடை விதித்தும், படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், வெளியீட்டாளரிடம் ரூ.5 கோடி இழப்பீடு வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், என்.புகழேந்தி விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், அந்தக்கால திரைப்படங்கள் குடும்ப உறவையும், நாட்டுப்பற்றையும் வளர்க்கும் விதமாக இருந்தன.
தற்போதைய திரைப்படங்கள் ஆபாசம், வன்முறையைப் பரப்புவதாக உள்ளன. தகாத வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனங்கள், பாடல்களை வைத்து விளம்பரம் தேடுகின்றனர்.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களும் பல குற்றச்செயல்களுக்குக் காரணமாக உள்ளன. பெரும்பாலான கதைகள் தவறான உறவுகளை மையப்படுத்தியே அமைகின்றன. டிவி நெடுந்தொடர்களுக்கு தணிக்கைக்குழு எதுவும் கிடையாதா?
தற்போது மாணவர்கள் ஆன்லைன் வழியாக கல்வி கற்கின்றனர். அப்போது இதுபோன்ற டீசர்கள் குறுக்கிடும் போது வளரினம் பருவத்தினர் தவறான வழிக்கு செல்ல வாய்ப்புள்ளது என்றனர்.
மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், இரண்டு என குறிப்பிட்டு இணையதளத்தில் தேடுதலில் இறங்கினால் இப்படத்தின் டீசர் வருகிறது. இதனால் மாணவ, மாணவிகளின் மனநிலை பாதிக்கிறது என்றனர்.
இதையடுத்து, யூடியூப், முகநூல், கூகுள் நிறுவனம் மற்றும் இரட்டை குத்து படக்குழுவினர், மத்திய தணிக்கை குழு, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ. 20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT