Published : 03 Nov 2020 07:24 PM
Last Updated : 03 Nov 2020 07:24 PM

மீனாட்சிம்மன் கோயிலில் செல்போன் தடை நீக்கப்படுமா?- சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் எதிர்பார்ப்பு

மதுரை 

உலகப் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் செல்போன் தடை நீக்கப்படுமா என்று பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உலகளவில் அதிகளவு தேடப்படும் கோயில்களில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் முக்கியமானதாக திகழ்கிறது. சுற்றுலா மற்றும் வழிபாட்டிற்காக உலக நாடுகள் முதல் உள்நாள் வரை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

தற்போது கரோனா தொற்று பரவலால் உள்ளூர் பயணிகளே அதிகளவு வருகின்றனர். உள்ளூர் பயணிகள், வழிபாட்டிற்காகவும், வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வருவோர் பெரும்பாலும் மீனாட்சியம்மன் கோயிலின் கட்டிடக்கலை அழகை கண்டு ரசிக்க அதிகளவு வருகிறார்கள்.

அவர்கள் கோயில் வளாகத்தில் ஆங்காங்கே நின்று செல்போனில் கோயில் கட்டிட அழகை படம்பிடிப்பதும், கோயில் பின்னணியில் தங்களை செல்ஃபி எடுப்பதுமாக குதூகலமடைவார்கள். செல்போனில் எடுத்த புகைப்படங்களை தங்கள் சமூக வலை பக்கங்களில் பதிவிட்டும், அதை ப்ரிண்ட் போட்டு வாழ்நாள் ஞாபகார்த்தமாக வைத்து மகிழ்வார்கள்.

இந்தக் கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் ஏற்கெனவே துப்பாக்கி ஏந்திய போலீஸார் ‘சிப்ட்’ முறையில் 24 மணி நேரமும் கோயிலின் ஐந்து கோபுர வாசல்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்குப் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டிற்கு முன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்திற்குப் பிறகு கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

அதனால், பக்தர்கள் செல்போன்களை வெளியே வைத்துவிட்டு கோயிலுக்குள் செல்வதற்காக ஒவ்வொரு கோபுர வாசல் அருகேயும் தனியாக காலணிகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது போல், செல்போன் காப்பகமும் ஏற்படுத்தப்பட்டது. செல்போன் தடை வந்தது முதல் மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை குறைய ஆரம்பித்தது. தற்போது ஒவ்வொருரும் ஏழை, நடுத்தர மக்களே குறைந்தப்பட்சம் ரூ.10 ஆயிரத்திற்கு மேலான செல்போன்களை பயன்படுத்துகின்றனர்.

அவர்கள் அந்த விலை உயர்ந்த செல்போன்களை பாதுகாப்பு மையத்தில் விட்டுச் செல்ல தயங்குகின்றனர். செல்போனில்தான் தற்போது பொதுமக்கள் தற்போது அன்றாட செயல்பாடுகள், வங்கி ஆவணங்கள் மற்றும் குடும்பப் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வைத்துள்ளனர்.

அதனால், செல்போன் தடை இருப்பது தெரியாமல் கோயிலுக்கு வந்தவர்கள், வெளியே செல்போன்களை விட்டு செல்ல மனமில்லாமல் அவர்களில் யாராவது ஒருவர் செல்போன்களை வைத்துக் கொண்டு குடும்பத்தினரை சாமி தரிசனம் செய்வதற்கு உள்ளே அனுப்புகின்றனர். உள்ளூர் பக்தர்கள் செல்போன் தடையால் கோயிலுக்கு பெரும் பாலும் வருவதில்லை.

கடந்த காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 50 லட்சத்திற்கு மேலான பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருவார்கள். ஆனால், செல்போன் தடைக்குப் பிறகு பக்தர்கள் வருகை குறைந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 2013-14-ம் ஆண்டில் 57 லட்சத்து 31 ஆயிரத்து 650 பேரும், 2014-15ம் ஆண்டில் 59 லட்சத்து 26 ஆயிரத்து 72 பேரும், 62 லட்சத்து 99 ஆயிரத்து 30 பேரும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்துள்ளனர்.

ஆனால், 2016-17ம் ஆண்டில் 45 லட்சத்து 4 ஆயிரத்து 824 பேராகவும், 2017-18ம் ஆண்டில் 41 லட்சத்து 15 ஆயிரத்து 758 பேராகவும் பக்தர்கள் வந்துள்ளனர்.

கடந்த ஆண்டும், இந்த ஆண்டுக்குமான பக்தர்கள் வருகையை கோயில் நிர்வாகம் வெளியிடவில்லை. மீனாட்சியம்மன் கோயிலை மையமாகக் கொண்டே மதுரையின் வளர்ச்சி உள்ளது. பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தால் மதுரையின் வளர்ச்சியும் குறைய வாய்ப்புள்ளதால் செல்போன் தடையை நீக்குவதற்கு கோயில் நிர்வாகம் முயற்சிகள் செய்ய வேண்டும் என்று பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரையிடம் கேட்டபோது, ‘‘நாங்கள் தடை விதிக்கவில்லை. பாதுகாப்பை உறுதி செய்யவே நீதிமன்றம்தான் செல்போனுக்கு தடை விதித்துள்ளது. மற்ற கோயில்களைப் போல் மீனாட்சியம்மன் கோயில் இல்லை. இங்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், எங்களிடம் செல்போன் தடையை நீக்க முயற்சி செய்யும்படி கோரிக்கைகள் எதுவும் வரவில்லை, ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x